மன்னார் உணவக பணியாளர்கள் பலருக்கு தொற்று!
மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை(15) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் 3 நபர்கள் மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர்கள். நான்காவது தொற்றாளர் பஸ் நிலைய பகுதி ஒன்றில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையத்தின் உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடைய விற்பனை நிலையத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
5 ஆவது நபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு உத்தியோகத்தர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கொரோனா தொற்றுள்ள நோயாளர் ஒருவரை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையிலே குறித்த உத்தியோகத்தருக்கு நோய் தொற்றி இருக்கலாம் என நம்புகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 21 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 17 நபர்கள் எழுந்தமானமாக சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதும், எஞ்சிய 4 நபர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போதும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் நகரப்பகுதி மற்றும் கடைத்தொகுதிகளில் எழுந்தமானமாக பீ.சி.ஆர்.பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த புதன் கிழமை மன்னார் மன்னார் நகர் பகுதியில் கடைகளில் வேலை செய்கின்றவர்கள். கடை உரிமையாளர்கள்,கடைகளுக்கு வந்தவர்கள் என 452 நபர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மாதிரிகள் அபேட்சா மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகளை எதிர் பார்த்துள்ளோம்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கை அரச போக்குவரத்து மன்னார் சாலை டிப்போவில் பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் கலந்து உரையாடியதன் பிரகாரம் அவர்களுக்கு தொற்றானது சாதாரண நிலமையில் ஏற்படவில்லை.
அவர்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினால் தொற்று ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே பொது மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கடை பிடிப்பதன் ஊடாக தொற்றில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ள முடியும்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் மிகவும் அபாயமான நிலையிலேயே வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
முதலாவது நபர் பேசாலை வைத்தியசாலையில் இருந்து சுவாசத்தினறல்,குருதி அமுக்க குறைபாட்டுடன் மாற்றப்பட்டார். மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் மன்னார் பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் தொடர்ந்தும் சிகிச்சை அழிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றார்.
இரண்டாவது நபர் கடுமையான வயிற்றோட்டம், குருதி அமுக்க குறைவு காரணமாக எருக்கலம் பிட்டி வைத்தியசாலையில் முதலுதவி செய்யப்பட்டு,மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது பிம்புர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எமது உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணியின் காரணமாக இவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
எனவே தொடர்ச்சியாக அதிகளவான நோயளர்கள் இவ்வாறு அபாயமான நிலமையில் வரும் போது இவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக எமது உத்தியோகத்தர்கள் கடமையாக பாடுபட வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் உயிர் இழப்புக்களையும் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மக்கள் அடிப்படையான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக நீங்கள் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற போது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை