இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் பேச்சுவார்த்தை!


ஜெனீவாவில் நடைபெறவுள்ள  ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக  மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட், வெளியிட்டுள்ள மோசமான அறிக்கை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தி வருகிறோம்.  மேலும் அவர் எழுப்பிய விடயங்களில் ஒருவித உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறோம்.

அந்தவகையில் இவ்விடயங்களில் முறையான பதிலை நாங்கள் நிச்சயம்  வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமையால், நான் அச்சமடைந்துள்ளேன்.

ஆகவேதான் எதிர்காலத்தில் இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுக்க  மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வகுத்துள்ளேன்.

மேலும் உலகளாவிய அதிகார வரம்பின் கொள்கையின் கீழ் சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கை குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்களின் வழக்குகளைத் தொடர்வதன் ஊடாகவும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட  தடைகளை விதிப்பதன் ஊடாகவும் நடவடிக்கை எடுக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும்

இதேவேளை பொறுப்புக்கூறல் உட்பட இலங்கையின் நிலைமையை ஆணையாளர் அலுவலகத்தின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தவும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதாடவும் அர்ப்பணிப்புத் திறனை ஆதரிக்கவும் மனித உரிமை பேரவை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.