அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு நிர்ணய விலை!


 அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தும் விதத்தில் சம்பா, நாட்டரிசியின் நிர்ணய விலை நூறு ரூபாவை தாண்டாத வகையிலும், பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் வரையில் மா, பருப்பு, கடலை, சீனி, டின்மீன், நெத்தலி ஆகிய அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படாத வகையிலும் வியாபாரிகளுடன் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கைகள், கொவிட் -19 நெருக்கடி நிலைமைகள் மக்களுக்கு இலகுவான முறையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு  நாட்டில் சம்பா மற்றும் நாட்டரிசியின் விலை நூறு ரூபாய்க்கு மேல் அதிகரிக்காத வகையில் கடைப்பிடிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அதேபோல் வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலேயே தேவையான அரிசியை உற்பத்தி செய்யவும், தேசிய விவசாயிகள், வியாபாரிகளின் கரங்களை பலப்படுத்தவும் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தின்  விளைவாகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மா, பருப்பு, கடலை, சீனி, டின்மீன், நெத்தலி ஆகிய அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படாத வகையில் வியாபாரிகளுடன் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ளவுள்ளது.

இதுவும் எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் வரையில்  விலைப்பட்டியலில் மாற்றங்கள் ஏற்படாத வகையில் கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பொருட்களுக்கு அரசாங்கம் வரி விதித்தால் விலையில் மாற்றங்கள் ஏற்படும், அல்லது இறக்குமதி விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் இங்கும் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த இரண்டு காரணிகள் அல்லாத வேறு எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படாத விதத்தில் சந்தைப்படுத்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.