அரச அலுவர்களை திருப்பியனுப்பிய கிளிநொச்சி சாந்தபுரம் மக்கள்!!

 


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவு சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகைதந்த அதிகாரிகளை எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.


கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகளால் சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இன்று காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் சாந்தபுரம் கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் மக்களையும் அழைத்திருந்தனர் .


சாந்தபுரம் கிராமம் உருவாக்கப்பட்டு இன்று வரை கல்வி சுகாதாரம், மற்றும் பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், பிரதேச சபை என அனைத்து நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்துடன் இருந்து வந்தது. அத்துடன் கடந்த காலத்தில் காணி அனுமதி பத்திரம் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் தற்போது காணிகளை முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்குள் கொண்டு செல்வது பொருத்தமற்றது என்றும், சாந்தபுரம் கிராமத்தை பொருத்தவரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கிளிநொச்சி மாவட்டமே அருகில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே எம்மை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு நாம் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கின்றனர்.


இதேவேளை சாந்தபுரம் கிராமத்தின் நில அளவை வரைபடத்தின்படி அது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால் மக்கள் அனைவரும் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்டத்துடன்வைத்திருகின்றார்கள். எனவே இதன் படி நாம் காணி ஆவணங்களை மாத்திரமே வழங்குவோம் ஏனைய நடவடிக்கைள் வழமை போன்று கிளிநொச்சி மாவட்டத்துடனே இருக்கும் என ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினர் கூறியுள்ளனர்.


மேலும் சாந்தபுரம் கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள் வருகின்றரமையால் காணி ஆவணங்களை மாத்திரமே முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் வழங்குவதற் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஏனைய நடவடிக்கைள் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்துடன் காணப்படும் ஆனாலும் இது நிர்வாக நடவடிக்கைகளில் குழப்பத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனவே வருங்காலத்தில் எல்லை மீள் நிர்ணய குழுவுடன் பேசி முழுமையாக சாந்தபுரத்தை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.