கோட்டாபயவை வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கி விட்டது!


 இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறினோம் என்று தம்பட்டம் அடித்த கோட்டாபய அரசு, அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கப்படும் காலம் நெருங்கி வருகின்றது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போலியான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசு, இன்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திக்குமுக்காடுகின்றது.

நல்லாட்சி அரசை எப்படியெல்லாம் விமர்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அன்று விமர்சித்தது ராஜபக்ச அணி. இன்று பௌத்த தேரர்களும், நாட்டு மக்களும் இந்த அரசைத் தூற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நலன் கருதி சர்வதேசத்தின் உறவைப் பேணிக்காத்து நல்ல வேலைத்திட்டங்களை நாம் அன்று முன்னெடுத்தோம். ஆனால், இந்த அரசோ எந்தவித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றது.

கொரோனாவின் மூன்றாம் அலை நாட்டைத் தாக்கியபோது, நாட்டை முழுமையாக முடக்காமல் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அரசே கொரோனாவைப் பரப்பியது. இன்று அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

கொரோனாவை சுயலாப அரசியலுக்குப் பயன்படுத்த எத்தணித்த அரசு, இன்று கொரோனாவால் ஆட்சியை முன்கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளது.

சிங்களவர்களின் மனதில் இடத்தைப் பிடிக்கும் நோக்குடன் தமிழ், முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டு உரிமைகளில் இந்த அரசு கைவைத்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதேபோன்று போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதற்குத் தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.