தமிழர் வாழ்வில் ஒரு மைல்கல் யாழ். பல்கலைக்கழகம்!!

 


தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் பெரும்பங்காற்றிய யாழ். பல்கலைக்கழகம் தமிழ்மக்கள் மனங்களோடு பின்னிப்பிணைந்த,  பிரிக்கமுடியாத ஒன்றாகும்.     யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழர்களின் ஒரு அடையாளமாக, ஒரு குறியீடாக விளங்கி வருகின்றது.  இதுவரையான காலத்தில் தமிழ்மக்களின்  கருத்தியல்சார் அடையாளமாக விளங்கிய யாழ் பல்கலைக் கழகம், கடந்த காலங்களிலும் இவ்வாறான இக்கட்டு நிலைகளைச் சந்தித்து தன்முனைப்பான பல வெற்றிச்செயல்களை ஆற்றி நிற்கிறது என்றால் மிகையில்லை.


பல கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கி, நிமிர்ந்து நிற்கும் பல்கலைத் தாயவளின் பணி என்பது வார்த்தைகளுக்குள் வரையறை செய்துவிட முடியாத ஒன்று. அபாயங்களும் அச்சுறுத்தல்களும் நெருக்கிய பலபொழுதுகளில் இந்த பல்கலை மாணவர்கள் அத்தனை பிரச்சினைகளையும் நேருக்குநேர் எதிர்கொண்டு மீண்டுள்ளனர்.


ஒரு இனத்தின் அடையாளங்கள் அழிக்கப்படுகிறது என்றால் அந்த இனம் மெல்ல மெல்ல வேரறுக்கப்படுகின்றது என்பதே கருத்தாகும். இலங்கை என்கிற தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சரி, சுதந்திரம் அடைந்த பிறகும் சரி தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இனஅழிப்பின் நியாயப்படுத்தலுக்காவும் போரின் எச்சங்களை அழித்துவிடும் வேகத்திலும் தன் எதேச்சதிகாரப்போக்கில் இலங்கை அரசினால் முள்ளிவாய்கால் மண்ணில் இறந்த மக்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத்தூபி கடந்த எட்டாம் திகதி இரவோடிரவாக இடித்து அழிக்கப்பட்டிருக்கிறது.அரசியல் விடயங்களில் இன்றுவரை  தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அது போதாதென்று தமிழ் மக்களை குறிவைத்து கக்கப்படும் இனவாதச் செயற்பாடுகளும் குறைவானவை அல்ல. சில பௌத்த தேரர்கள் மட்டுமன்றி பொதுபலசேனா போன்ற அமைப்புகளும் வெளிப்படையாகவே அதனைச் செய்கின்றனர். பெரும்பான்மை இனத்திற்கு ஒரு சட்டம், சிறுபான்மை இனத்திற்கு ஒரு சட்டம் என்ற வகையில்தான் இந்நாடு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை என்பது நீண்ட நெடுந்தொடர் போல இழுபட்டுக்கொண்டே செல்கின்றது.


அபாயகரமான அரசியல் சூழலுக்குள்ளும் அடக்கி ஆளப்படும் இனவாதச் சூழலுக்குள்ளும் தமிழ் மக்களின் வாழ்வு திரிசங்கு நிலையில்தான் சென்றுகொண்டிருக்கிறது.


போர் தின்று தீர்த்த எம் உறவுகளின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட  நினைவுத்தூபி என்பது தமிழ் மக்களின் ஆன்மா. அந்த ஆன்மா பூசிக்கப்படுவதற்கு ஏற்ற இடமாக விளங்கியது யாழ். பல்கலைக்கழகம். அது தமிழர்களின் ஆன்மா உறைந்துள்ள கோயில்.


பல நெருக்கடி நேரங்களிலும் தன் வீச்சைக் குறைக்காது இதய ஒலிகளை ஓங்கி ஒலித்து வேகித் தவித்த மக்களின் மனங்களுக்கு இதம் கொடுத்தவள் பல்கலைத்தாய். அவள் மடி தவழ்ந்த புதல்வர்கள்.


ஆன்மாவின் நரம்புகளை அசைத்துப் பார்ப்பது எத்தனை துயர்மிகுந்த ஒன்று. எமது எதிர்கால  சந்ததியினருக்கு போரின் வடு தெரியாமலே அழித்துவிட எண்ணியே இப்பாதகச்செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.


கொரோனா தொற்று அதிகமாகத் தலைதூக்கியுள்ள தற்போதைய நெருக்கடியான  சூழலில் இவ்வாறானதொரு செயலைச் செய்துவிட்டால் இந்த சம்பவம் மறைந்துவிடும் என்ற எண்ணப்போக்கை தகர்த்து தம்மைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கொட்டும் மழையையும் குவிந்து நின்ற இராணுவத்தினரையும் பொருட்படுத்தாமல் மாணவர் சக்தி என்பது 'கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம் போன்றது' என்பதை மீண்டும் ஒருமுறை எமது இளம்சந்ததியினர் நிரூபித்துள்ளனர்.


தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிப்போன யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழர்களின் கூட்டிணைவுத்தளம் என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.


 தமிழரசி,

தமிழருள் இணையத்தளம்,


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.