சட்டசபை தேர்தல் பணிக்கு 3 இலட்சம் ஊழியர்கள் தெரிவு!


தமிழக சட்டசபை தேர்தல் பணியில் 3 இலட்சம் அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தமிழக சட்டசபையின் தற்போதைய 5 ஆண்டு பதவிகாலம் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எனவே அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த மாதம் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என எல்லா கட்சிகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 2-வது வாரம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்காக தற்போது வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 20ஆம் திகதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன்பிறகு வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தொடங்கும்.

இதற்கிடையே தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தேர்வு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. இதற்காக துறை வாரியாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணியை நடத்தி முடிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் 3 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் புகைப்படம் ஒட்டி தனிப்படிவம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஊழியரும் எந்த துறையை சேர்ந்தவர், எந்த பதவி வகிக்கிறார், அவரது முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அந்த படிவத்தில் தெரிவிக்கப்படும்.

அவர்கள் தபால் வாக்குகளை அளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 3 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் வாக்காளர் பட்டியல் பதிவு எண் ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் யார்-யார் என்பது தெரிந்துவிடும்.

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபட சேர்க்க வேண்டாம் என்று கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்கு தேர்வாகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்க தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். ஏற்கனவே மின்னணு எந்திரங்களை பயன்படுத்தியவர்களுக்கு புதிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை தமிழகத்தில் கூடுதலாக சுமார் 35 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. எனவே கூடுதல் ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை அதிகம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலா ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டியது உள்ளது. எனவே இந்த தடவை சுமார் 95 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குச்சாவடிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓட்டுப்பதிவு தினத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்போது யாருக்காவது கொரோனா இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மற்றவர்களுக்கு வாக்குச்சாவடி விவரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.