இன்று புரட்சியாளன் பாட்ரிஸ் லுமும்பா  (Patrice Lumumba) நினைவு தினம்!


'தலைவர் நேர்மையாக/ அறத்துடன் போராடியும் ஏன் அவருக்கு இந்த உலகம் அங்கீகாரத்தை வழங்கவில்லை? '

என்பது நம்மில் பலரின் கேள்வியாக இன்னும் தொடர்கிறது.

தலைவருக்கு முன்பே பாட்ரிஸ் லுமும்பா போன்றவர்களுக்கும் இதுதான் நடந்தது.

உலகின் அனைத்துப் புரட்சியாளர்களும் வரலாற்றில் ஒரு தர வரிசையில் வைத்து நினைவு கொள்ளப்படுவதில்லை.

நவீன அரச பயங்கரவாதம் அல்லது இன்றைய நவீன உலக ஒழுங்கு தமது வசதிக்கு ஏற்றமாதிரி சிலரை வரலாற்றில் இருந்து மறைத்தும், சிலருக்கு நுட்பமான அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது.

சோவியத் புரட்சியாளர்களின் பட்டியலோடு மாவோ, கோசிமின், மண்டேலா, கஸ்ட்ரோ, அரபாத் என்று நீளும் பெரும் பட்டியலில் இறுதியில் சே குவேரா வும் இணந்து கொள்கிறார்.

ஆனால் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள்ளான ஒரு பட்டியல் இருக்கிறது.
அது பாட்ரிஸ் லுமும்பா வில் தொடங்கி சமோரா மோசஸ் மார்சல், தோமஸ் சங்கரா என்று நீள்கிறது.

இவர்கள் வரலாற்றின் இருட்டடிப்புக்குள்ளானதற்கு ஒரே காரணம்தான்..

அதாவது அவர்கள் அரச பயங்கரவாத உலக ஒழுங்கை ஈவிரக்கமின்றி குலைக்க முயன்றதுதான்.

ஏனைய புரட்சியாளர்கள் ஏதோ ஒரு புள்ளியில் இன்றைய அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்மடிந்து போனதால் வரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதுதான் அதன் சூட்சுமம்.

தலைவர் பிரபாகரனும் தமிழீழ விடுதலையினூடாக அரச பயங்கரவாரத் தளைகளிலிருந்து உலகில் அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் தேசிய இனங்களை விடுவிக்கும் சூட்சுமங்களைத் தன்னகத்தே கொண்டவராக அடையாளம் காணப்பட்டார்.

இதனால் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் தள்ளவே இன்றைய உலக ஒழுங்கு பெரும் பிரயத்தனப்படுகிறது.

அதுதான் இந்தப் பாராமுகம்.
ஆனால் ‘நந்திக்கடல்’ அவரை வரலாற்றின் மையத்தில் இழுத்து நிறுத்தி ஒரு தனித்த நிகழ்வாக அவரை மாற்றியிருக்கிறது.

இதன் வழி இனி வரப் போகும் நவீன மனித குல வரலாற்றில் அவர் ஒரு தலை சிறந்த புரட்சியாளனாக மட்டுமல்ல ஒரு கோட்பாட்டாளனாகவும் கொண்டாடப்படுவார்.

_______________________________________________

Patrice Lumumba.
ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டின் விடுதலைக்காக இறுதிவரை போராடி 1961 ஜனவரி 17 மடிந்தான் விடுதலை வீரன் பாடரிஸ் லுமும்பா. அந்த சிறிய தேசத்தின் அழிவுக்கும் அந்த விடுதலை வீரனின் படுகொலைக்கும் சூத்திரதாரிகளாக ஐ.நா தொடக்கம் பல மேற்குலக நாடுகள் வரை பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

காரணம் மிக எளிமையானது.

கொங்கோவின் விடுதலை உலக காலனியத்திற்கெதிரான விடுதலையாகிப் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாய் கொங்கோவை ஆக்கிரமித்திருந்த பெல்ஜிய அரசிற்கு பல உதவிகளை செய்து பாட்ரிஸ் லுமும்பா படுகொலைக்கு துணை நின்றன. மனித விழுமியங்கள் உடைந்து சிதறுகின்றன நம் கண்முன்னே…

அடிமைப்பட்டு அல்லலுறும் அந்த கொங்கோ மக்களின் மேல் யாருக்கும் பரிதாபம் வரவில்லை. மாறாக அரச பயங்கரவாதத்திற்கு துணைபோனது உலகம். இன்றைய உலக ஒழுங்கு இப்படித்தான் இருக்கிறது…

பாடரிஸ் லுமும்பா தான் கொல்லப்படுவதற்கு முன்பாக தனது மனைவிக்கு எழுதிய இறுதிக்கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

‘….அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவனாகவும் உயிர் வாழ்வதைவிட தலைநிமிர்ந்தபடி அசைக்க முடியாத பற்றுடனும் என் நாட்டின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் மரணமடைவதையே நான் விரும்புகின்றேன். வரலாறு ஒருநாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஐ.நா. விலோ வொசிங்டனிலோ புருஸ்ஸல்ஸிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக காலனியாதிக்கத்திடமிருந்தும – அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும். ஆப்பிரிக்கா தன் சொந்த வரலாற்றை தானே எழுதும். அது சகாராப் பாலைவனத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் பேரின்பமும் கண்ணியமும் நிறைந்திருப்பதை சொல்லும் வரலாறாக இருக்கும்…”

ஆம், அந்த விடுதலை வீரனின் அரசியல் விருப்ப ஆவணத்தைப்போல் தமிழீழமும் இறுதி இலட்சியத்தை அடையும்வரை குறுக்கேவரும் எத்தகைய மாபெரும் சக்தியையும் எதிர்த்து போராடும். செய்யும் அல்லது செத்து மடியும். அடிமையாகவும் புனிதமான கொள்கைகளை வெறுப்பவர்களாகவும் உயிர்வாழ்வதை விட தலை நிமிர்ந்தபடி அசைக்க முடியாத பற்றுடனும் தமிழீழத்தின் எதிர்காலத்தின் மீதான மாபெரும் நம்பிக்கையுடனும் மடிவதையே விரும்புகிறது.

நந்திக்கடலில் வைத்துப் புலிகள் இதைத்தான் செய்து காட்டினார்கள்.

இது மண்டை வீங்கிய அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலில் ஒத்தோடும்  அடிவருடிகளுக்குப்  புரியாது. அதுதான் இன்று வரை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு ஒரு நாளில் தனது தீர்ப்பை எழுதும். இந்த வரலாறு ஜெனிவாவிலோ, புதுடில்லியிலோ , கொழும்பிலோ கற்பிக்கப்படும் வரலாறாக இருக்காது. மாறாக ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் அடக்குமுறையாளர்களிடமிருந்ததும்
அதன் கைப்பாவைகளிடமிருந்தும் விடுதலை பெற்ற நாடுகளில் கற்பிக்கப்படும் வரலாறாக இருக்கும்.

தமிழீழம் தன் சொந்த வரலாற்றைத் தானே எழுதும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.