வல்லினம் தொடர் 1- கோபிகை!!

 


தூரத்தில் கேட்ட கோயில் மணி ஓசையில் புரண்டபடி கண் விழித்தாள் ஆரபி.  வீட்டுக் கூரைக்கு  அருகில் நின்ற பலா மரத்தில் அணில்கள் இரண்டு ஓடிப்பிடித்து விளையாடியபடி கீச்சிடுவது கேட்டது. குருவிகளின் சலசலப்பு காதில் சங்கீதமாய்  பாய்ந்தது. 'இரைதேடப் புறப்பட்டுவிட்டன போல' தனக்குள் எண்ணிக் கொண்டாள். எங்கோ தூரத்தில் ஒற்றைக் குயில் ஒன்று இடைவிடாது கூவிக்கொண்டிருந்தது. 

என்னைப்போலவே அதுவும் தனித்துவிட்டது போல என நினைத்தவள், தன் தலையை தானே தட்டி, "அசடு...அசடு..... அவர்தான் எப்பவும் உன் நினைப்பில இருக்கிறாரே, பிறகு எப்பிடி, நீ தனியாவாய்" என்றபடி திரும்பிப்படுத்தாள். சிந்தனைகள் சிதறிப்போகத் துடித்தன, அவளது எண்ணக் குதிரைகள் பந்தய ஓட்டத்திற்கு ஆயத்தமாய் ஆரம்ப இடத்தில் நின்று சத்தமிட்டன, அவள்தான்,  அதனை ஒதுக்கிவைத்தபடி எழுந்துகொள்ள ஆயத்தமானாள். 


தலைமாட்டில் இருந்த அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தாள், சரியாக 5 .00 காட்டியது. 'அதுதான், கோயிலில் மணிச்சத்தம் கேட்டிருக்கிறது,'  என நினைத்தபடியே எழுந்து அமர்ந்துகொண்டவள், கால்களைச் சம்மணமிட்டு அமர்ந்தபடியே சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்துவிட்டாள். மெல்லிய மூச்சுகளை இழுத்து வெளியேற்றி மனதைச் சமநிலைப்படுத்திக் கொண்டாள். 

நீண்ட விறாந்தையில் இசைஅரசி அக்காவும் அவரின் மூன்று பிள்ளைகளும் கடைசித் தொங்கலில் அவளும் படுத்திருந்தனர், திரும்பிப் பார்த்தாள், பள்ளிக்குடம் விடுமுறை விட்டாச்சு தானே, எல்லோரும் நித்திரை, அதென்னவோ தெரியாது, டாண் என்று ஐந்து மணிக்கு அவளுக்கு விழிப்பு வந்துவிடும். படிக்கிற காலத்தில படிக்க 


எழும்பினது, பிறகு, பணிக்காக எழும்பினது, தடுப்பால வந்த பிறகு, அண்ணான்ர பிள்ளைகளை கவனிக்கிறதுக்காக, அண்ணியின்ர மனதில கொஞ்சமாவது இடம்பிடிக்கவேணுமே, எந்த வசவையும் வாங்கிக்கட்டிக்கொள்ளாமல் இருக்கவேணுமே எண்ட பயத்தில  எழும்பினது, இஞ்ச வந்த பிறகு. அப்பிடி எந்த கரைச்சலும் இல்லை எண்டாலும் பழகிப்போன வழக்கத்தில அந்த நேரத்துக்கு எழும்பிவிடுறது வழமையாவே போயிட்டுது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.