வல்லினம் 11- கோபிகை!!

 


மாலைப்பொழுது மெல்லிய இருளுடன் இருந்தது. விளாத்தி மரத்தின் அடியில் இருந்த மரக்குற்றியில் சாய்ந்தபடி அமர்ந்துகொண்டாள் ஆரபி. மனமெல்லாம்  வலித்தது. ஏனோ, அதிக நாட்களின் பின்னர் தணிகையின் நினைவு அவளுக்குள் வியாபித்து நின்றது. அவனோடு அவள் அதிகம் பேசிக்கொண்டதில்லை, நிறைய நேரங்களை அவனோடு செலவிட்டதும் இல்லை, பார்த்த ஓரிரு தருணங்களில் ஏனோ, மனதில் நிறைந்து நெஞ்சில் குடிகொண்டவன். 


அவனை நேசித்துவிட்ட அவளால் இன்னொருவனை நினைக்கவோ ஏற்கவோ முடியவில்லை, அதனால்தான் அண்ணா அண்ணியை எதிர்த்து வீட்டைவிட்டு வந்து இங்கே தங்கியிருக்கிறாள், சட்டென அவளுக்குள் தணிகைமாறனின் நினைவுகள் குமிழிட்டன, அவளும் சந்தோசமாக அந்த ஈரத்துளிகளில் நனையத் தொடங்கினாள். 

அவள், போராட்டத்தில் இணைந்து அப்போது நான்கு வருடங்கள் கடந்திருந்தது. அவள் மருத்துவத்துறைப் போராளியாக இருந்தாள், களமுனையில் மருத்துவம் முடிந்து, ஒரு வைத்திய பராமரிப்பகத்தில் தலைமையாளராக இருந்தாள், உயர்தரத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்விகற்றவள், என்பதாலும், மருத்துவத்துறையில் அவளுக்கிருந்த ஆர்வத்தினாலும் இந்த துறையின் கல்வி அவளுக்கு மிக எளிதாகவும் விருப்பமானதாகவும் இருந்தது, அங்கு கற்றவர்களில் முதல் நிலையில் இருந்ததோடு, எதையும் எளிதில் கற்றுவிடும் திறனும் அவளுக்கு இருந்தது. 

அப்போது கரிப்பட்டமுறிப்பு சண்டை நடந்துகொண்டிருந்தது. நிறைய போராளிகள் காயத்துடன் கொண்டுவரப்பட்டனர், அவர்களில் ஒருவனாக வந்தவன்தான் தணிகைமாறன். அவனுக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டிருந்தது. அத்தோடு நெஞ்சுப்பகுதிக்கு சற்று கீழே குண்டு பாய்ந்திருந்தது. அவள்தான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தாள், நிறைய குருதி போய்விட்டிருந்ததால், அவனது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. ஏனோ தணிகையைப் பார்த்த கணத்தில் மற்றநேரங்களைவிட மனதில்  ஒரு வேதனை படர்ந்தது. உடனடியாக சத்திரசிகிச்சை கூடத்திற்கு எடுத்தவேளை அவனுக்கு குருதி ஏற்றவேண்டும் என உணர்ந்ததும், அவனது குருதி வகை பற்றி அறிந்து அவசரமாய் செயல்பட்டாள், இருப்பில் இருந்த குருதிவகைகளில் அவனுக்கான குருதி இல்லாது போனதால், பொதுவழங்கி குருதி வகைகையைக் கொண்ட அவள், தானே தனது குருதியைக் கொடுத்து அவனுக்கு குருதி ஏற்றினாள். குருதி ஏற்றி சில மணிநேரம் கடந்தபின்னும் கூட அவன் கண் திறக்கவில்லை, மனம் அடித்துக்கொள்ள தனது அறையில் இருப்புக் கொள்ளாது அடிக்கடி அவனைச் சென்று பார்த்துவிட்டு வந்தாள். 


அங்கு வருகின்ற எல்லோரையும் சக உறவாய் நேசித்து, தாயாய் அன்புகாட்டி, நட்போடு தைரியம் சொல்லி பார்த்துக்கொள்வது அவளது இயல்பு என்றாலும் தணியைமாறனின் விடயத்தில் அவள், சற்று அதிகமாகவே கவலைப்பட்டதும் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீரும் அவளுக்கே விசித்திரமாக இருந்தது. அவன் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அவள் இன்னும் சாப்பிடக்கூட இல்லை, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தபோதும் அதைப்பற்றி நினைக்க விரும்பாதவளாய்,  தன்னை உலுக்கிக்கொண்டாள். 

இரவு பதினொரு மணிவரை தணிகைமாறனுக்கு நினைவு வரவில்லை, சக வைத்தியர்கள்,  'வீட்டிற்கு தெரிவிப்பது நல்லது போல, அவரின்ர பொறுப்பாளரிட்டச் சொல்லிவிடுவம்' என்றபோது ஏனோ, ஆரபிக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்துவிட்டது, அவளது உயிரே ஊசலாடிக்கொண்டிருப்பது போல தோன்றியது. எதுவும் பேசாமல், தனது அறைக்குச் சென்றுவிட்டவள், அவனுக்காக உருகி உருகி அழுதுகொண்டிருந்தாள். 

நேரம் பன்னிரண்டு என்பதை அவளது கையில் இருந்த கடிகாரம் ஒலியெழுப்பி காண்பித்தது. தலையை கையில்  தாங்கியபடி அமர்ந்திருந்தவள், 'ஆரபி அக்கா.....ஆரபி அக்கா....'.என்ற தாதி இசைவிழியின் சத்தத்தில் அவசரமாய் எழுந்து அமர்ந்தாள். 

"என்ன இசை.....ஏனிப்பிடி ஓடிவாறாய்? 

"அக்கா.....அந்த பத்தாம் கட்டில் அண்ணா......."

இதயம் ஒருகணம் நின்றுபோனது ஆரபிக்கு.  வீரமரணம் அவனைத் தழுவிக்கொண்டுவிட்டதா, இதற்காகத்தான் அழுது தீர்த்தாளா, விழிகள் மெல்ல உடைப்பெடுக்க  தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று, 

"பத்தாம்கட்டில் அண்ணா......"என்றாள். 

"கண் முழிச்சிட்டார் அக்கா"

'அப்பாடா.......'என்றதொரு அமைதி படர்ந்தது அவளுக்குள். 

நீண்டபெருமூச்சொன்றை வெளிவிட்டவளாக அவசரமாய் விரைந்து நடந்தாள். நடந்தாள் என்பதைவிட ஓடிச்சென்றாள் என்பதுதான் பொருந்தும். அத்தனை வேகம் இருந்தது அவளது நடையில். 

மெல்ல கண்களை விழித்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் தணிகைமாறன். அதுவரை அவனது பெயரை மட்டும்தான் அவள் அறிந்திருந்தாள். அவனது படையணி பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. 

அதனைக் கேட்டால்தானே அறிவிக்கமுடியும் என நினைத்துக் கொண்டே, 

"தணிகை...மாறன்...." ஏனோ சட்டென வந்துவிடும் அண்ணா என்ற வார்த்தை அவனிடம் வரமறுத்தது. 

"ம்..." முனகல் மட்டுமே அவனிடமிருந்து வெளிப்பட்டது. 

உங்கட படையணி......

அவன் பேசமுடியாது என்பதபோல சைகை செய்தபடியே மீண்டும் உறங்கிவிட, சற்றுநேரம் அவனையே பார்த்துவிட்டு வெளியே வந்தபோதுதான் சங்கடமாக உணர்ந்தாள். 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.