வருடங்கள் கடந்து சிந்து அப்பாவைப் பற்றி புத்தகத்தில் எழுதிய பதிவு.!

 அப்பாவும் நானும்...!


ஆண்டுகள் பல முடிந்திட்டாலும் எனது அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை செய்யநினைத்தவை செய்யவைத்து கைதட்டிமகிழ்ந்தவை எல்லாமே இன்று எனக்கு கொஞ்சமே ஞபகமாய்............. 
இப்ப பார்த்து மகிழும் வயது எனக்கு. ஆனால் எதையும் பெறமுடியாதவளாய் உங்களை நிறைய மிஸ்பண்ணிவிட்டன் அப்பா.... மற்றப்பிள்ளைகள் தங்கள் அப்பாவுடன் அன்பைப்பகிரும்போதும் அவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுக்கும் போதும் எனது மனம் எவ்வளவு வலிக்குதப்பா....!

அப்பா என்னை தமிழீழத்தின் ராஜதந்திரி ஆக்கி வெளிநாடுகளுக்கு நான் போகும்போது நீங்கள் என்னுடைய பையை தூக்கி கொண்டு என்னோடு வரவேண்டும் என்று பல கனவுகள் கண்டீர்களாமே!

கடைகளுக்கு கூட்டி போனால் உங்களுக்கு பிடிக்காட்டிலும் எனக்கு பிடிக்கும் என்பதற்காக எல்லாம் வாங்கி தருவீர்களாமே. அது எப்படி அப்பா எனக்காக உங்களையே மாற்றிக் கொண்டீர்கள் . ஒரு நாள் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருந்த போது விசுவமடுவில ஒரு கடைக்கு அம்மாவுடன் போனேனாம் அப்போது ஒரு சப்பாத்து இருந்ததாம் அம்மாவிடம் வாங்கி தரச்சொல்லி கேட்டேனாம் அதற்கு அம்மா வாங்கி தரவில்லையாம். ஆனாலும் நான் அடம்பிடிக்காது நல்ல பிள்ளை போல் வந்து நீங்கள் வேலை முடிந்து வந்ததும் "அப்பா நான் ஒரு சப்பாத்து கண்டு வாங்கி தரச்சொல்லி அம்மாவிடம் கேட்டேன் அவா வாங்கி தரவில்லை" என்று சொன்னேன். அப்போது நான் உங்கள் முழங்காலிற்கு கிட்ட இருந்தேனாம். தன்னிடம் தனது மகள் முதல் முதலாக நிமிர்ந்து நின்று கேட்டு விட்டாள் என்று உடனேயே கூட்டி போய் வாங்கி தந்தீர்களாமே.

நீங்கள் மேடைகளில் பேசும் போது நான் கீழே இருந்து உங்களை பார்த்து விட்டு தவழும் வயதில் தவண்டும் மெல்ல மெல்ல நடக்கும் வயதில் தட்டு தடுமாறி படிகளில் ஏறி வந்து உங்களுக்கு பக்கத்தில் இருப்பேனாம் கேட்டுக் கொண்டு குழப்படி செய்யாமல். இப்போது நானும் மேடைகளில் ஏறுகிறேன் எந்தவிதத்திலும் பயமோ தடுமாற்றமோ இல்லாமல் பலபேர் கைதட்டி பாராட்டுகிறார்கள்... ஆனாலும் நீங்கள் பக்கத்தில் இருக்கும் போல் வருமா?

இன்றும் ஜெனிவாவில் உங்கள் உயிரற்ற உடலை நான் கொஞ்சி வழியனுப்பிய படம் இத்தனை வருடங்களாக நீதி வேண்டி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நீதி கிடைக்கவில்லை. உங்களைப் போல் கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. எப்போது தான் நீதி கிடைக்குமோ.......?

உங்களின் மகளாக உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவேன் அப்பா... அதுவரை நாம் இருவரும் உள்ளுணர்வோடு பேசிக் கொள்வோம்.....!

சிந்து சத்தியமூர்த்தி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.