திருச்சி மாநாட்டில் திமுக வேட்பாளர் பட்டியல்!

 


சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு முறையும் திமுக நடத்தும் மாநாடுகள்அரசியல் முக்கியத்துவம் பெற்றவை.

இந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திருச்சிக்கும் பெரம்பலூருக்குமிடையே உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெற்று வந்த திமுக மாநாடு ஏற்பாடுகள் இன்று , மாநாட்டுதேதி அறிவிக்கப்பட்டதால் தீவிரமடைந்துள்ளன.

தேனியில் நடந்த, ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி திமுக மாநாடு மார்ச் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இதே நேரம் அதிமுகவும் தனது தேர்தல் மாநாட்டினை பிப்ரவரி 28ஆம் தேதி நடத்த ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் அதிமுகவின் தேர்தல் மாநாடு நடக்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதிமுக பிப்ரவரி 28ஆம் தேதி மாநாடு என்று முடிவு செய்த நிலையில், அதற்கு அடுத்த சில தினங்களில் தேர்தல் அறிவிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..

இந்த நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதுதான் திமுகவின் தேர்தல் மாநாடு நடைபெறுமா என்ற விவாதம் திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

"இந்த மாநாடு முதலில் பிப்ரவரி 21ஆம் தேதி திட்டமிடப்பட்டது. பிறகு அது பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இடையில் மாநாடு ஏற்பாடுகளில் ஐபேக் நிறுவனம் தலையிடுவதாக குமுறல் எழுந்தது. மாநாட்டு ஏற்பாட்டாளரான திமுக தலைமை கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு இதை மறுத்தார். ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெறுவதால், மாநாடு மார்ச் 10ஆம் தேதி நடக்கலாம் என்று திருச்சி திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அரியலூரில் பிரச்சார பயணத்தை முடித்த ஸ்டாலினோடு சென்னை, மதுரை, தேனி என தொடர்ந்து பயணித்து இந்த தேதியை வாங்கியிருக்கிறார் கே. என். நேரு.

மாநாட்டுக்கான பெரும்பாலான செலவுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருமுன்பே செய்யப்பட்டுவிட்டன என்பதால் இதில் செலவு பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் தலைமைக் கழக வழக்கறிஞர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் மார்ச் 14 ஆம் தேதிக்கு நிறைய நாள் அவகாசம் இருப்பதால் அதற்குள் விருப்பமனு பெறுதல், வேட்பாளர்கள் பரிசீலனை, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை அனைத்தையும் முடித்து திருச்சி மாநாட்டில் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலையும், திமுகவின் வேட்பாளர் பட்டியலையும் ஸ்டாலின் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.