விஷாலை நம்பாத யஷ்... கைமாறிய விநியோக உரிமை!


பாகுபலி படம் வெளியான நேரத்தில் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அதன்பிறகு, அப்படியான எதிர்பார்ப்பு கே.ஜி.எஃப் சேப்டர் 2-வுக்கு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

கன்னட நடிகர் யஷ் நடிக்க கடந்த டிசம்பர் 28இல் வெளியான படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். தமிழ் வெர்ஷனுக்கு நிழல்கள் ரவியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படமும் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது.

முதல் பாகத்தை நடிகர் யஷ் நண்பரான விஷால் தமிழில் வெளியிட்டார். அதாவது, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம்தான் விநியோக உரிமையைப் பெற்று தமிழில் படத்தை வெளியிட்டது. அதோடு, நடிகர் யஷ்ஷை தமிழ் ரசிகர்களுக்கு விஷால்தான் அறிமுகம் செய்தார். அப்படி இருக்கையில், கே.ஜி.எஃப் சேப்டர் 2 படமானது ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், படத்துக்கான பிராந்திய மொழிகளுக்கான விநியோக விற்பனையும் முடிந்துவிட்டது. முதல் பாகத்தை வாங்கி வெளியிட்டவர்களே, இந்தப் படத்தையும் வாங்கி வெளியிடுகிறார்கள். ஆனால், தமிழில் விஷால் பிலிம் பேக்டரிக்கு பதிலாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது கே.ஜி.எஃப்.

ஏன் திடீர் மாற்றம்... தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு விநியோக உரிமையைக் கொடுக்க என்ன காரணம் என்று விசாரித்தால், புதிய தகவல் கிடைத்தது. முதல் பாகத்தை வெளியிட்ட விஷால் வசூல் தொகைக்கான கணக்கை முறையாகக் கொடுக்கவில்லையாம். அதோடு, பெரிதளவில் லாபமும் தயாரிப்பு நிறுவனத்துக்குச் செல்லவில்லை என்று தெரிகிறது. அதோடு, இரண்டாம் பாகத்தை தமிழக உரிமையாக விலை பேசியிருக்கிறது கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம். 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கடை விரித்திருக்கிறது. இதனால், எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை.

இறுதியாக, விநியோக உரிமை அடிப்படையில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் கே.ஜி.எஃப் 2 படத்தைக் கைப்பற்றியிருக்கிறது. தமிழைப் போல, மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் நிறுவனம் படத்தை வாங்கி விநியோகம் செய்ய இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

-ஆதினி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.