இந்திய தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன!



15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 25 நாடுகள் இந்திய தடுப்பூசிக்காக காத்திருக்கின்றன என மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏற்கனவே கோவிஷீல்ட் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், கடந்த மாதம் 3ஆம் திகதி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனையடுத்து, டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு அனுமதிக்காக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பை அணுகப்போவதாக கூறி உள்ளது.

இந்த தருணத்தில், ஆந்திர மாநிலம் அமராவதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “என் நினைவின்படி இதுவரை இந்தியாவில் இருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 25 நாடுகள் நமது தடுப்பூசிக்காக வரிசையில் காத்து நிற்கின்றன. இந்தியாவை உலக வரைபடத்தில் இந்திய தடுப்பூசிகள் கொண்டு போய் வைத்திருக்கின்றன.

ஏழைகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசியை மானிய அடிப்படையில் வினியோகிக்கிறது.

சில நாடுகள் இந்திய அரசு தடுப்பூசிக்கு என்ன விலை கொடுக்கிறதோ, அதே விலையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள விரும்புகின்றன.

சில நாடுகள், தடுப்பூசி நிறுவனங்களுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டுள்ளன. அவை வணிக ரீதியில் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கின்றன.

ஒய் 2 கே பிரச்சினையின்போது இந்தியா உலகின் தகவல் தொழில்நுட்ப தலைமையிடமாக உருவானது போலவே இப்போது மருந்து துறையில் உள்நாட்டில் உள்ள திறன்களையும் வழிகளையும் பயன்படுத்தி இந்தியாவை உலகின் மருந்தகமாக ஆக்குவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் ஆகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.