யாழில் 41 பவுண் திருடிய கள்ளன் சிக்கினார்!


 யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பழம் வீதியில் உள்ள வீடுடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய திருடன் 3 மணித்தியாலத்தில் நகரிலுள்ள நகைக்கடைகள் தொகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு பிள்ளை விடச் சென்று திரும்பிய போது, வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன.

அதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதுதொடர்பில் தகவலைப் பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான அணியினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது சந்தேக நபர் நகைகளை விற்பனை செய்ய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடைகளில் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபரிடமிருந்து 41 தங்கப்பவுண் நகைகளும் 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.