நடேஸ்-பிரியா குடும்பம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

 


அவுஸ்திரேலியாவில் நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள நடேசன்- பிரியா தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடொன்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருதரப்பினரும் தத்தம் மேன்முறையீடுகளில் தோல்வியடைந்துள்ளதால் இவ்விவகாரம் முடிவின்றித் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடேசன்- பிரியா குடும்பம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய பெடரல் நீதிமன்ற நீதிபதி, நடேசன்- பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பத்தில் நடைமுறை நேர்மை காண்பிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

அதேபோன்று குறித்த விவகாரத்தில் பிரியா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சட்ட செலவீனங்களுக்கென 206,934 டொலர்களை அரசு வழங்கவேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, முன்னைய நீதிபதியின் தீர்ப்பு உறுதியானது என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நடேசன்- பிரியா இருவரும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் பிறந்த தருணிகாவும் சட்டவிரோத குடியேறியாகவே பார்க்கப்படுவதாகவும், அவர் சார்பில் கடந்த செப்டம்பர் 2019இல் விண்ணப்பிக்கப்பட்ட SHEV விசா விண்ணப்பம் செல்லுபடியற்றது (குடிவரவு அமைச்சர் விதிவிலக்கு அளிக்காதபட்சத்தில்) என வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக பிரியா குடும்பம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலிய அரசாங்கமும் நடேஸ்- பிரியா குடும்பமும் பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தீர்ப்புக்கெதிராக உயர்நீதிமன்றம் செல்லவேண்டுமெனில், அவர்கள் சிறப்பு அனுமதி பெற்றபின்னரே அந்த சட்டப்போராட்டத்தை தொடர முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.