வீட்டில் இருந்தவாறு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும்

 


தோட்டத் தொழிலாளர்களுக்காக அனைவரும் ஒருநாள் ஒன்று திரளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வன் அழைப்பு விடுத்துள்ளார்.


கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தை ராஜாங்க அமைச்சரும் எமது அமைப்பின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் கடந்த 29 திகதி கொழும்பில் நடைபெற்றது.

அப்போது பெருந்தோட்ட கம்பனிகள் மாற்று நடவடிக்கை ஒன்றினை எடுத்திருக்கின்றார்கள். அதில் அடிப்படை சம்பளமாக 725 ரூபாவும் ஏற்கனவே கூறப்பட்ட 125, 100 என்று ஆயிரத்திற்கு அதிகமான சம்பளத்தினை காட்டினார்கள்.

தொழிற்சங்கங்களின் ஒரே நோக்கம் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான்.

இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்று முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.

ஆனால் பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க முடியாது என்று விடாபிடியாக இருக்கிறார்கள்.

ஆகவே நாங்கள் ஒரு முடிவு எடுத்திருககின்றோம். பெருந்தோட்ட மக்களுக்காக ஒரு அடையாள வேலை நிறுத்தத்தினை எங்களது உயர் பீடம் கூடி முடிவு செய்துள்ளது. அதனை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு கட்சி தொழிற்சங்க பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

அதே நேரம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பல தொழிற்சங்கங்கள் கூறியிருக்கின்றார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆகவே கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து தொழிற்சங்கங்களும் அரசியலுக்கு அப்பால் எந்த விதமான போராட்டமும் இல்லாமல் ஒரு அடையாள வேலை நிறுத்தத்தில் மாத்திரம் ஈடுபடுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆசிரியர்கள், அதிபர்கள் வர்த்தகர்கள், பொது மக்கள் தோட்டத் தொழிலாளர்கள் மேல் அக்கறையிருக்கின்ற அனைத்து தரப்பினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த போராட்டமானது தற்போது கொரோனா தொற்று தீவிரமாக காணப்படுவதனால் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப சமூக இடைவெளிகளை பேணி வீட்டில் இருந்துவாறு இந்த போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

அதே நேரம் மறைந்த தலைவர் தோட்டத்தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே ஒரு வரைபினை கொடுத்திருந்தார். சிறு தோட்டத்தொழிலாளர் என்பது 1000 தேயிலை 500 தேயிலை என பிரித்து கொடுப்பது அல்ல. இந்த தோட்டங்களை முழுவதுமாக எமது மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிலைபாடாக அன்று முதல் இன்று ஜீவன் தொண்டமான் வரை உள்ளது. ஆகவே இந்த சம்பள பேச்சு வார்த்தை முடிந்த உடன் தோட்டத்தொழிலாளர்களை சிறு தோட்ட முதலாளிமார்களாக ஆக்குவது தொடர்பான நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் இதன் போது தெரிவித்தார்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.