தமிழர் தரப்பு ஒன்றுபட்டுச் செயற்பட முடிவு!!

 


தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.


இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.


அத்துடன், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் பல கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.


அவர் கூறுகையில், “ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ அல்லது தேர்தல் கூட்டோ அல்ல. தமிழர்களுக்கு எதிரான விடயங்களில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றுசேர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.


எனவே, அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காகச் செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்கமுடியாது.


அத்துடன், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். மனித உரிமைப் பேரவை தனக்கு உரிய அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி தமது வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக சில முக்கியமான விடயங்களை புதிய வரைபுக்குள்ளே உள்ளடக்கியிருக்கிறார்கள்.


இலங்கை தொடர்பான விடயம் சர்வதேச மேற்பார்வையின் கீழே தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகளை இணை அனுசரணை நாடுகளுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.


இந்த அரசாங்கத்தின் போக்கு தமிழர்களுக்கு எதிராக இருப்பது தெரிந்த விடயம். தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எமது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றது. இருப்பைப் பாதிக்கின்றது. தொல்லியல் திணைக்களம் வன வளத்திணைக்களம் ஆகியன முன்னெடுக்கும் விடயங்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து கலந்துரையாடியிருந்தோம்.


அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பாகவும் வரவுசெலவுத் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்த கட்சி உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசியிருக்கிறோம். கட்சி பலப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம்.


புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட குழுவிற்கு எமது பிரேரணைகளை முன்வைத்திருந்தோம். அதனடிப்படையில், அவர்களுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது.


மூன்றாவது, குடியரசு அரசியலைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அது தமிழ் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை உள்ளடக்கியதான வகையில் இருக்கவேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் ஐயா வலியுறுத்திப் பேசியிருந்தார். இதனால், நன்மை வருமா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது.


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புகள், குறித்த பேரணி நடத்தப்பட்டதற்கான பத்து காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது.


அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே, சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. அதனால், நாங்கள் அதற்கு எதிர்ப்பு என்று அர்த்தம் இல்லை.


எனவே, குறித்த சில காரணங்களை வைத்து ஆதரவைத் திரட்டிவிட்டு வேறுகாரணங்களைச் சொல்வது நியாயமற்ற விடயம். அதையே, நாங்கள் சொல்லியிருந்தோம். உறுப்பு நாடுகளுக்கு நாம் அனுப்பிய கடிதத்திலே இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்த வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதற்கு மாறானவர்கள் நாங்கள் அல்லர்” என்று குறிப்பிட்டார்.


இதேவேளை தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,  தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று இப்போது இருப்பதாக தனக்கு தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதனிடையே குறித்த கூட்டத்தில், தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக அண்மைய காலங்களில் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை முயற்சி பற்றிய விடயம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட நிலையில், வெளியிலுள்ள கட்சிகள் மற்றும் தோல்வியடைந்த தலைவர்கள் ஒரு தளத்தை உருவாக்குவதற்கே இந்த ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டது.


அத்துடன், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களே தற்போது வெளியில் கட்சிகளை உருவாக்கியுள்ளனர் எனவும், அவர்கள் புதிய கூட்டணியை உருவாக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.