வவுனியாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!


நீதிமன்றின் தடை உத்தரவையும் மீறி வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.

வவுனியாவில் சுதந்திர தினமான இன்று அடையாள உணவுதவிர்ப்பு போராட்டம் ஒன்றை வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

அதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டதுடன், வவுனியா பொலிஸ் பிரதேசத்திற்குள் ஆர்பாட்டம் எதனையும் நடத்தவேண்டாம் என்று உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த உத்தரவையும் மீறி அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை10 மணிக்கு பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் “இன்று பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் என சிங்கள தேசம் குதூகலித்துக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது.

73 வருடங்களுக்கு முன்பு இதே நாளிலே எங்கள் தமிழ் தலைவர்களும் பிரிட்டிசாரும் விட்ட பிழையால் தமிழினம் தொடர்ந்தும் சுதந்திரம் கிடைக்காத இனமாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது.

எனவேதான் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தினை காலங்காலமாக கறுப்பு நாளாகவும் துக்கதினமாகவும் கடைப்பிடிக்கின்றோம்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அங்கவீனர்கள், அரசியல் கைதிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பற்றி எதுவித அக்கறையும் காட்டவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க எதுவித நடவடிக்கைகளும் எடுக்க முன்வரவில்லை. தமிழ்மக்கள் பாரபட்சமாக இனத்துவேசத்துடன் நடத்தப்படுவதையோ, இலங்கையிலே ஒரே குற்றத்துக்கு தமிழர்களுக்கு ஒரு நீதியும் சிங்களவர்களுக்கு வேறொரு நீதியும் என்று பகிரங்கமாகவே இனப் பாரபட்சம் காட்டப்படுவதையோ கண்டுகொள்ளவில்லை.

இதுவரை எங்களுடன் சேர்ந்து போராடிய 80 இற்கு மேற்பட்ட தாய் தந்தையர் நீதி கிடைக்காமலேயே இறந்து விட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் அவர்களது உறவுகள் தாமும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடனேயே தொடர்ந்து போராடி வருகின்றனர்.

எமது போராட்டங்களும் உரிமைக்காக எழுப்பப்படும் எமது குரல்களும் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு எமது குரல்வளை நசுக்கப்படுகின்றது.

இவையாவற்றிற்குமான தீர்வை சர்வதேசம் வலிந்து பெற்றுத் தரும் என நாம் அக்கறையின்றி இருந்துவிட முடியாது.

குட்டக் குட்ட குனிந்தால் குட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். எமது உரிமைகளுக்காக நாம் போராடும் போதுதான் சர்வதேசத்தின் கவனம் எம்மீது திரும்பும்.

எனவே அன்பான தமிழ் சொந்தங்களே தமிழனாக பிறந்தால் மட்டும் போதாது கொஞ்சமாவது தமிழ் உணர்வுடன் வாழவேண்டும்.

இனியாவது அடக்குமுறைகளுக்கு எதிராக எழுப்பப்படும் குரலில் உங்கள் குரலும் ஒலிக்கவேண்டும். போராடும் சொந்தங்குளுக்கு கைகொடுத்து தோள்கொடுத்து பங்காளர்கள் ஆகுங்கள். எதிர்கால சந்ததிகள் உங்களை வாழ்த்தட்டும்” என தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஏ.ஆர்.எம்.லரிப், பிரதசே சபை உறுப்பினர் சந்திரபத்மன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.