இலங்கையிலும் வேகமெடுக்கும் பிரிட்டனின் புதிய வைரஸ்!


 பிரிட்டனில் இனங்காணப்பட்ட புதிய வகை வைரஸ் தற்போது 80 நாடுகளில் பரவியுள்ள நிலையில் எமது நாட்டில் கொழும்பு,அவிசாவளை, பியகம போன்ற பகுதிகளில் புதிய வகை வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர் என ஆரம்ப சுகாதார, கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவிசாவளையிலிருந்தும் ஹங்வெல்ல பிரதேசத்திலிருந்தும் இனம் காணப்பட்டுள்ளவர்களுக்கு புதிய வகை வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது பற்றி தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றது.

மேற்படி வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்பதுடன் ஒரு தொற்றாளரிலிருந்து பெரும்பாலானோருக்குத் தொற்ற கூடியதென்றும் தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது மிக அவசியமானதென்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையேற்பட்டால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த நேரலாம் என்றார்.

கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குமாறு தான் இரு கரம் கூப்பி மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சானது இதுவரை மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளில் மக்களின் பூரண ஆதரவு கிடைத்துள்ளதென தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் அந்த ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறும் நாட்டு மக்களிடம் கும்பிட்டுக் கேட்டுக்கொள்வதாகவும் நேற்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.