சுதந்திரதின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம்!


 சுதந்திரதின நிகழ்வில் தனிச்சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவித்துள்ளது கோட்டாபய அரசு.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் உடனான சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சிக் செயலாளர் கமல்குணரட்ன இன்று இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கீதம் இசைக்கப்படுவது ஜனாதிபதி சுதந்திர தின வைபத்தில் கலந்துக்கொள்ளும் வேலையில் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்படும். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இடம்பெறும்.

கடந்த காலம் முதல் தேசிய கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த குறைபாடுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்கு செயலாளர் பதிலளிக்கையில், தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை பயன்படுத்துகின்றோம். சமுகத்தில் பல்வேறு தரப்பினர் இதில் உள்ள குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டினர்.

தேசிய கொடியில் சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தி வடிவமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பில், பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இறுதி நடவடிக்கையாக இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இம்முறை தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்தும் பொழுது இதிலும் பார்;க்க மேலதிகமாக ஏதும் செய்வதற்கு இல்லை. இதனால் நாம் முன்னர் பயன்படுத்திய தேசிய கொடியை நாம் பயன்படுத்துவோம்.

தேசிய கொடியில் எந்த மாற்றமும் இல்லை. சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனை வடிவமைப்பாளர்களுடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வாரத்தில் வீடுகளிலும், வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்களில் கலந்துக்கொள்ளும் அனைத்து படையினரும் பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

இராணுவத்தில் 3153 பேரும், கடற்படையில் 823 பேரும், விமானப்படையில் 740 பேரும், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையில் 510 பேரும், சிவில் பாதுகாப்பு படையில் 407 பேரும் இந்த அணி வகுப்பில் கலந்துக்கொள்ளவுள்ளனர். சுதந்திர தினத்தின் பெருமையை பாதுகாப்பதற்காக இந்த படையினர் தேவைப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சுகாதார அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டிகளுக்கு அமைவாகவே இந்த சுதந்திர தின வைபவம் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.