மனித உரிமைகள் பேரவையில் தினேஷ் !

 


பெப்ரவரி 22 – மார்ச் 23 வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் இலங்கை தனது கருத்துக்களை முன்வைக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமர்வின் ஆரம்ப நாட்களில் நடைபெறும் உயர்மட்ட கூட்டங்களில் பொதுவாக நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள்.

இந்நிலையில் கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, மொண்டிநீக்ரோ, வடமசிடோனியா ஆகியவற்றின் சார்பாக பிரித்தானியாவின் வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் பிரெய்த்வெயிட் இலங்கை மீதான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையின் முன்மொழிவுடன் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை மேற்கொண்ட பதில் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் ஆணையாளர் தயாரித்த அறிக்கையும் இவ்வமர்வில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இவ்வறிக்கைகள் மூலம் பலத்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவிக்க இது ஒரு தருணம் என்றாலும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு இது மிகவும் சவால் நிறைந்த நாட்களாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்கவிருக்கும் இதர நாடுகளின் பிரதிநிதிகள் தரப்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.

கோர் குழும நாடுகளால் முன்வைக்கப்படும் புதிய தீர்மானம், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 30 கீழ் 1 – 40 கீழ் 1 தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், குறித்த தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகியதாக புதிய அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஐ.நா. ஆணையாளர் வெளியிட்ட இலங்கை தொடர்பான புதிய அறிக்கையில், கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை கவனிக்கத் தவறியமையானது இத்தகைய மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற டைகளையும் ஐ.நா. ஆணையாளர் முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கும்போது, ​​அதனை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு 16 தவறான விளக்கங்கள் அடங்கிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.