மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா


நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்று அபாயத்தை அடுத்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதாரத் துறையினால் வழங்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த வருட  யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பட்டம் பெறுபவர்களைத் தவிர பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் எவரும் விழா மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் யாழ்.பல்கலைக்கழக கொவிட் 19 தடுப்பு முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கான அறிக்கை இன்று  வியாழக்கிழமை(18) வெளியிடப்பட்டது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர், கொவிட் 19 தடுப்பு முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன், பதிவாளர் வி.காண்டீபன், கல்வி, வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்.மாவட்டத்தினுள்ளே கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் ஏற்பட்டுவிடலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஏற்ற வகையில் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைக் கருத்தில் எடுத்து, எங்களுடைய மாணவர்களுக்கு இந்தப் பட்டமளிப்பைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்தப் பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். 

உள்ளக அரங்கில் மாணவர்களை உள்வாங்கும் போது சகலரையும் பதிவுக்கு உட்படுத்தி அவர்களிடையே சமூக இடைவெளியைத் தெளிவாகப் பேணி அவர்களிடம் எதுவித நோய் அறிகுறியும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிக்கவிருக்கிறோம். 

உள்ளக அரங்கு மிகுந்த காற்றோட்டம் உள்ளதாகக் காணப்படுவதால் ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர் அறிவித்தபடி ஒரே நேரத்தில் 150 பட்டதாரிகள் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கமைய ஒவ்வொரு அமர்வும் மேலும் மூன்று அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்துக்கு ஒரு சமூகப் பொறுப்பு உண்டு. இதனால் அனைத்தையும் கருத்திற் கொண்டே நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் எம்முடன் தொடர்பு கொண்ட வண்ணமுள்ளனர். அவர்களின் அறிவுறுத்தல்களையும், சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் கவனத்தில் எடுத்துள்ளோம். 

தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டே நிகழ்வுகள் திட்டமிடப் பட்டுள்ளன. மாற்றங்கள் ஏற்படுமாயின் அதற்கேற்றவாறு பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.