‘உப்பெனா’ திரைவிமர்சனம்!!

 


உப்படா என்கிற கடலோர கிராமத்தில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் தேஜும், அதே கிராமத்துப் பெரும்புள்ளியின் மகள் க்ரீதி ஷெட்டியும் காதலிக்கின்றனர். சாதிவெறி பிடித்த அப்பா விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை மீறி க்ரீதி காதலனைக் கைப்பிடித்தாரா என்பதே ‘உப்பெனா’.


சரியான நடிகர்கள் இருந்தாலே பாதி வெற்றி என்பதை உணர்ந்து மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களிலும் நடிகர் தேர்வை கச்சிதமாகச் செய்துள்ளார் இயக்குநர் புச்சிபாபு சனா.


அறிமுக நாயகன் வைஷ்ணவ் தேஜ் காதல் வயப்பட்டுத் தலையாட்டும் இடங்களில் 'சுப்பிரமணியபுரம்' ஜெய்யை நினைவுபடுத்தினாலும் அந்த வயதுக்கே உண்டான வேகம், துடுக்குடன் சண்டையிடுவது, சிறு வயதிலிருந்து ஈர்ப்பு கொண்டிருக்கும் பெண்ணை எந்தத் தொந்தரவும் செய்யாமல் தூரத்திலிருந்து பின்தொடர்வது, காதலில் விழுந்தபின் மலைப்புடன் அவளைப் பார்க்கும் பார்வை என்று முதல் படத்திலேயே பாராட்ட வைக்கிறார்.


அழகிய நாயகி க்ரீதி ஷெட்டிக்கு முதல் படம் இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகளில் வைஷ்ணவைப் போல நடிக்கக் கஷ்டப்படுகிறார். ஆனால், அதையும் மீறி ஈர்க்கிறார். இறுதிக் காட்சியில் அழுதுகொண்டே நடந்த சம்பவங்களைக் கேட்பது, பின் முடிவெடுத்து நம்பிக்கையுடன் நிமிர்வது என்று காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். நாயகன், நாயகி என இருவரது முகங்களிலும் இருக்கும் பதின்ம வயது வெகுளித்தனம் அந்தக் கதாபாத்திரங்களை ரசிக்க வைக்கிறது. அவர்களின் உணர்வுகளை நமக்குப் புரிய வைக்கிறது.


சாதி கவுரவமே முக்கியம் என்ற கொள்கையோடு வாழும் விஜய் சேதுபதி தனது ஒவ்வொரு அசைவிலும் வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். அவரது நடவடிக்கை, அவர் புகைப்படங்கள் மட்டுமே நிறைந்த அறை, செயலிழந்த மனைவியைக் கவனிக்காமல் இருப்பது, தந்தையைக் கூட கண்டிப்பது என்று இந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.


தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் எல்லாம் அவரது பழைய பாடல்களை நினைவுபடுத்துகின்றன. பின்னணி இசையும் ஷம்தத்தின் ஒளிப்பதிவும் கதையின் களத்தோடு நாம் பயணிக்க உதவியிருக்கிறது. வசனங்கள் சிறப்பு.


திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான உணர்வைத் தரும் காதல் காட்சிகளில் கத்தரி போட்டிருக்கலாம். அரசாங்கம் அல்லது தனி நபர் சுயநலத்தால் தங்கள் இடத்தை விட்டு வெளியேற்றப்படும் மீனவ கிராம மக்களின் நிலை முதல் பாதியில் சொல்லப்பட்டாலும் அந்தக் கட்டத்தோடு அது நின்றுவிடுகிறது. மேற்கொண்டு அவர்கள் நிலை என்ன என்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. கண்டிப்பாக வில்லனுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு நடக்க வேண்டும் என்று விரும்பும் மாஸ் திரைப்பட ரசிகர்களுக்கு படத்தின் வித்தியாசமான முடிவு ஏமாற்றம் தரலாம்.


பதின்ம வயதுக் காதல், சாதி/ மதப் பிரச்சினை, எதிர்க்கும் அப்பா என்கிற 'அலைகள் ஓய்வதில்லை' கதையை வித்தியாசமான ஒரு கருத்தைச் சொல்லி முடித்திருக்கிறார் புச்சிபாபு சனா. முன்னே பின்னே என்று கதை சொல்லப்பட்ட விதம், 'ரங்கஸ்தலம்' படத்தை நினைவுபடுத்தும் உருவாக்கம் (making), சரியான நடிகர்கள், அழுத்தமான வசனங்கள் எனப் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் சோர்வு தராமல் நகர்கிறது.


வரப்போகும் விஷயங்களை, முன்னரே திரைக்கதையில் சின்ன சின்ன இடங்களில் கோடிட்டுக் காட்டியது நல்ல யோசனை. சாதி வேறுபாட்டை வைத்துக் கருத்து சொல்லாத வசனங்கள், பெண் தவறு செய்தாள் என்று தெரிந்தும் கண்டிக்காத அப்பா என்று ஆங்காங்கே புதிய அணுகுமுறையை இயக்குநர் காட்டியுள்ளார். முக்கியமாக ஆண்மைத்தனம் என்று நம்பப்படும் விஷயமும், உண்மையாக அதன் தன்மையும் வேறு வேறு என்று சொல்லப்பட்ட செய்தி வெகுஜன மக்களுக்கான வணிக ரீதியிலான சினிமாவில் புதியது, முக்கியமானது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.