வல்லினம் 8- கோபிகை!!

 


அது பின்மாலைப் பொழுது....வீட்டின் திண்ணையில் எல்லோரும் கூடியிருந்தனர். அவ்வேளை சீராளனும் தோட்டத்திலிருந்து வந்துகொண்டிருந்தான். அவனைத் தூரத்தில் கண்டதுமே துள்ளிப் பாய்ந்து வித்தியாசமாகச் சத்தமிட்டு அவனது வரவை உணர்த்தியது பரி. அந்த வீட்டின் காவல்காரன்.....

அந்த வீட்டில் அனைவருமே பரிக்கென்று தனியான கவனிப்பு காட்டினர். காரணம் இல்லாமல் இல்லை, சிவகாமி அம்மாவின் இரண்டாவது மகன், தணிகைமாறன் தூக்கிவந்து கொடுத்த நாய்க்குட்டி அது. அப்போது குட்டியாக இருந்தது, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதே, அவர்களுடன் அவன் நினைவாக அது வாழ்ந்துகொண்டிருக்கிறது, பரி என்ற பெயரும் அவனால் சூட்டப்பட்டதுதான். முள்ளிவாய்கால் வரை அவர்களுடன்தான் வந்தது, அதன் பின்னர் அதைக்கொண்டுபோக முடியாததால் விட்டுச்செல்ல நேரிட்டது, ஆனால் மீள்குடியேற்றம் வந்தபோது, காணியில் நின்று அவர்களை வரவேற்றது பரி மட்டும்தான். இத்தனை நாட்களாக அது உயிரோடு இருப்பதும், தன் இருப்பிடத்தை மறவாமல், காவல் காத்ததும் அதிர்ச்சி என்றாலும், இல்லாமல் போய்விட்ட மகன் கொண்டுவந்தது என்பதால், சிவகாமி அம்மா அதைக் கட்டிப்பிடித்து கதறித் தீர்த்தது அவர் மனதில் இருந்த பாரச்சுமையை ஓரளவு குறைத்தது என்றே சொல்லவேண்டும். முகாமில் இருந்தவரை மகனை நினைத்தே, உருகிக் கிடந்தவர், யாரோடும் எதுவும் பேசாது மௌனம் காத்தவர், சொந்த மண்ணில் கால்வைத்தபோது, அதுவும், பரியைக் கண்டபோதுதான் கதறி அழுதார் என்பதையும்,  வேறொரு உலகிற்கு இட்டுச்சென்றிருந்த மகனுக்கான ஏக்கம் குறைந்து மெல்ல அவரை நிஜவாழ்க்கைக்கு வரவைத்தது பரி என்பதும் அந்த வீட்டில் எல்லோருக்கும் தெரியும். அதனாலும் அந்த வீட்டில் பரிக்கு ராஜஉபச்சாரம் தான்.  

தாச்சியில் மணலைப்போட்டு, அது சூடேறியதும் கச்சானை அள்ளிப் போட்டு வறுத்துக்கொண்டிருந்த தமக்கையைப் பார்த்த,  சீராளன், "என்னக்கா...திடீரெண்டு, கச்சான் வறுக்க இருந்திட்டியள்?" என்றான். 

"கன நாளாச்சு, கச்சானும் கிடந்து காயுது, பாத்திட்டு வறுக்க எடுத்துவந்தன்"

"சரி ...சரி.....நல்ல தேத்தண்ணீ ஒண்டும் போடுங்கோ, கச்சானும் பிளேன் ரீயும் அப்பிடி இருக்கும்" 

அவன் சொல்லிமுடிக்க, அசாத்திய மௌனம் ஒன்று நிலவியது. 

திரும்பிப் பார்த்த சீராளன், சட்டென்று தலைகவிழ்ந்துகொண்டான். "கடவுளே......தணிகை அண்ணா, இப்பிடித்தான் சொல்லுறவர், நானும் அதே மாதிரிச் சொல்லிப்போட்டன்"

விரித்த விழி மூடாமல், அவனையே பார்த்தாள் ஆரபி.  சீராளனின் குரலும் அச்சு அசல் அண்ணனின் குரல் போலவே இருந்ததில் ஒரு கணம் மூச்சு நின்று வந்தது அவளுக்கு. 

"ஆண்டவா......ஏன் இப்படிச் சோதிக்கிறாய், எங்கையெண்டாலும் இருந்தா கெதியில கொண்டுவந்து சேத்திடு, நாளும்பொழுதும் அவரின்ர எண்ணத்தோட நான் செத்துக்கொண்டிருக்கிறன்" அரற்றினாள். 

மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்த சீராளன், கனிவோடு தலைஅசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.  உள்ளே அறையில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிவகாமி அம்மாவிற்கு நெஞ்சுக்குள் காந்தியது, வாழும் வயதில், காணாமல் போய்விட்ட தன் மகனுக்காக காத்திருக்கும் ஆரபியின் மீது பரிதாபமும் வலியும் ஒருங்கே தோன்றியது. 

'பரிதாபப்பட்டா மட்டும் காணுமே, அவளைப்பற்றி கரிசனைப்பட வேண்டாமே,' உள்ளம் இடித்தது. 'நானென்ன செய்யமுடியும்,' ஒருபுறம் இப்படி நினைத்தாலும் அவளிடம் கதைக்கவேண்டும் என நினைத்துக் கொண்டார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.