வல்லினம் 10 - கோபிகை!!

 


ஆனையிறவைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்த பேருந்து. நடுத்தர வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. வீதியில் அணிவகுத்த மரங்களெல்லாம் ஓடுவது போல ஒரு பிரமை. சில்லென வீசிய இதமான காற்று தலைமயிரை கலைத்து விளையாடியது, கண்களை மூடியபடி தலையைக் கண்ணாடியில் தலைசாய்த்திருந்தாள், கானகி. 

மாலைக்காற்று இதமாகவே இருந்தது, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சொந்த ஊருக்குப் புறப்பட்டுவிட்டாள். கண் மூடிக்கொண்டாலும் நினைவெல்லாம் அந்த எழுத்துக்களிலேயே நின்றது அவளுக்கு. அது என்ன ஒருவகை அமைதியான காதல்.....வரிகள்......

மீண்டும் பையைத் திறந்து, அந்த வார சுடரொளி பத்திரிகையை எடுத்தாள். கண்கள் அவளுக்கு பாடமாகிப்போன அந்தப் பக்கத்திற்குத் தாவியது. 

நினைவுகள் தள்ளாடும், 

கனவுகள் கம்பளம் விரிக்கும், 

காப்பரணில் காதல் சிறகுலர்த்தும், 

ஆனாலும் 

நீயும் நானுமென்பதைக் காட்டிலும் 

நம் தேசவிடுதலை 

மனதோரம் பெரிதாகிச் சிரிக்கும்,

மார் சுமக்கும் வெடித்துளிகள் 

எண்ணத்தில் எழுந்துநிற்கும், 

இறுகப்பற்றிய ஆயுதத்தோடு 

இறுகிப்போகும் மனக்கதவும்......


வித்தகன் (கடல்)

மகஸின் சிறைக்கூடம். 

எனப்போடப்பட்டிருந்தது. என்னவோ அந்தக் கவிதையை வாசித்த கணத்தில் இருந்து அவளுக்குள் ஒரு தவிப்பு. காவலரணில் துளிர்த்த காதலின் வலி அவளை யோசிக்கச் செய்தது. 

இதுவரை வித்தகன் என்று மட்டுமே பெயரிட்டிருந்த அவனது பெயர் இந்த முறை மாத்திரம் கடல் என்றதொரு பெயருடனும்  வந்திருக்கிறதே, 

கடல் என்பது அவனது இயற்பெயராக இருக்குமோ, அல்லது தவறுதலாக கடல் என்று அச்சிடப்பட்டுவிட்டதோ, கடல் என்பது ஆணா, பெண்ணா என்ற வாதம் மனதில் போட்டியிட,ஆணாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவிற்கு வந்தாள் கானகி. ஏனோ கடல் என்ற பெயர் அவள் மனதில் வேரூண்றியது. 

அவனை ஒருமுறை பார்க்கவேண்டுமே என மனம் ஆர்ப்பரித்தது. அதற்கு முதல், இந்த விடயத்தை ஆரபி அக்காவிடம் சொல்லவேண்டும் என நினைத்தவாறு பத்திரிகையை மடித்து பையில் வைத்தவளின் நினைவுகளோ அவளிடம் தங்க மறுத்தது. 

'கடல்...எப்படி இருப்பான்,'  'அவன் யாரையாவது காதலிக்கிறானோ,' 'அதனால்தான் இப்படி கவிதை எழுதினானோ,' எண்ணங்கள் தறிகெட்டுப் பாய்ந்ததன. ஏனோ அவனுக்கு காதலி இருப்பாள் என்ற எண்ணமே அவளுக்கு உவப்பாக இருக்கவில்லை. அந்த நொடியில் அதற்கான அர்த்தம் அவளுக்குப் புரியவும் இல்லை. கடல் என்ற அந்தப் பெயர் மட்டும் அவளையறியாமலே மனதில் ஆழப்பதிந்துபோனது. 

பேருந்து, ஆனையிறவு கடற்பகுதியை கடந்தது. என்றுமில்லாதவாறு இனிமையான ஒரு புன்னகை அவளது உதடுகளை அலங்கரித்தது. கடலை எட்டிப் பார்த்தாள், அதில் தெரியாத அவன் முகம் இருப்பதுபோல ஒரு பிரமை அவளுக்குள். 

'கடல்.... ' .....உச்சரித்துப் பார்த்தாள், உதடுகளில் ஒருவித இனிமை, 

மீண்டும் மெல்ல 'கடல்......' என்றாள். 

"ம்ம்.....கடல்தான், எத்தினை தரம்தான் சொல்லுவாய்?" அருகிலிருந்த அம்மா கேட்டதும்தான்,  தன் மடத்தனத்தை நினைத்தபடி, அமைதியானாள். சிரிப்பாக இருந்தது அவளுக்கு. 'ஏனிப்படி இருக்கிறேன், அவனென்ன கடவுளா? கடல் ஆண்தான் என எப்படி நினைக்கிறேன்....இப்படி அவன் பெயரை தினமும் உருப்போடுகிறேனே,' 

எண்ண எண்ண என்னவென்று தெரியாத விந்தை அவளுக்குள் வியாபித்தது. கண்களை மூடிக்கொண்டாள், உருவம் தெரியாத அவன், அவளது கற்பனையில் இடம்பிடித்தான். மெலிதான பனிப்படர்வாய் அவள் நினைவுகளில் நிறைந்து நின்றான் அவன். 

வித்தகனின் கவிதைகளில் இதுவரை இருபது கவிதைகள் வரை அவள் சேர்த்து வைத்திருக்கிறாள், ஒவ்வொன்றும் கார்கால மேகம் போல சுமை நிறைந்ததாகவே இருக்கிறது. 'அவனுக்குள் என்ன இருக்கிறது. அவனது மனதின் துயரங்களை கவிதைகளிடம் பகிர்ந்துகொள்ள முனைகிறானா, அது ஏன், அவனோடு பேச, யாருமில்லை என்ற ஆதங்கமா, அதை விஞ்சிய தாய்நாட்டின் மீதான பற்றா? மண்ணைக் காதலிக்கும் மகத்துவத்தைத்தான் காதலாய் வரைகிறானா, இதையெல்லாம் தாண்டி, அவன் யாரையாவது காதலிக்கிறானா?' என்ற கேள்விகள் கானகிக்குள் வளரத் தொடங்கின, அவனைக் காணவேண்டும், காணும்போது அவனிடமே இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ளவேண்டும் என நினைத்தபடி ஆசனத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். 


தொடரும்...

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.