வல்லினம் 12- கோபிகை!!

 


இந்த அனுபவம் வாழ்வில் அவளுக்குப் புதிது. தாதியாக இருக்கும் இசை என்ன நினைத்திருப்பாள் என எண்ணியபடியே அவசரமாய், குரலைச் சீராக்கிக்கொண்டு, 

"இசை, இவரைப் பாத்துக்கொள், நாளைக்கு காலையில கண் முழிச்சிடுவார் எண்டு நினைக்கிறன், அப்ப விபரத்தைக் கேப்பம்"

"சரி அக்கா"

விரைந்து நடந்தே தனது இருப்பிடத்தை அடைந்தாள் ஆரபி. 


அதிகாலையில் விழித்துவிட்ட ஆரபி, அவ்வேளையே குளித்து, உடைமாற்றி, வெளியே வந்தாள். 

அவனது கட்டில் அருகே இழுத்துச்செல்ல முற்பட்ட கால்களை, மிகச்சிரமப்பட்டு, இழுத்துக்கொண்டு, பக்கத்து கட்டடத்திற்குள் நடந்தாள். அங்கிருந்த சிலரைப் பார்த்துவிட்டு, பின்னர் தணிகைமாறனிடம் வந்தவள், மெல்ல விழித்தபடி, வலியில் முனகிய அவனை ஒரு சங்கடத்துடனே பார்த்தாள். 

மற்றவர்களிடம் காட்டும் இரக்கம் நிறைந்த நெருக்கத்தை ஏனோ காட்டமுடியாமல்போனது அவனிடம், அவள் ஒரு வைத்தியர்  என்பதற்கப்பால், யாருக்கு வலி என்றாலும் உடனடியாக அவர்களின் கரம் பற்றி, தடவிக்கொடுத்து, ஒரு தாயாக மாறி உரையாடி, அமைதிப்படுத்திவிடுவாள். தணிகைமாறனிடம் அப்படி நடந்துகொள்ள அவளால் முடியவில்லை. 

"ரொம்ப வலியோ?" என்றாள் மென்மையோடு. 

ம்...

"சரி......உங்கட படையணித்தகவல் வந்திருக்கு, நான் சொல்லி விட்டிருக்கிறன், வீட்டுக்கு அறிவிப்பினம், என்றாள்."

விசேட வேவுப்பிரிவின் பொறுப்பாளரான தணிகைமாறன், பொறுப்பாளரிடம் கேட்டு கெஞ்சி, நிறைய கதைத்தே இந்தச் சண்டைக்குச் சென்றிருந்தான். 

காலையில் எட்டுமணியிருக்கும் போதே அவனது தாயும் சகோதரியும் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அதுவரை அடிக்கடி அவனை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவர்கள் வந்ததைக் கண்டபின்னர்,  அங்கே வரவில்லை. 

தாய் மாலைவரை அவனோடு இருந்ததாக இசை சொல்லக் கேட்டதும் சிறு புன்முறுவலை பதிலாக்கினாள் ஆரபி. 

வாரம் ஒன்று ஓடிவிட்டிருந்தது. தணிகைமாறன் சற்றே எழுந்து அமரத் தொடங்கியிருந்தான். அவனது வீடு முல்லைத்தீவில் இருந்ததால், புதுக்குடியிருப்புக்கு ஒவ்வொருநாளும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர் அவனது வீட்டினர். 

அத்தை, சித்தி, என்று வேறு யார் வந்தாலும் அவனது அம்மா மட்டும் நாள் தவறாது வந்துபோய்க்கொண்டிருந்தார். எல்லோருடனும் நன்றாக உரையாட ஆரம்பித்திருந்த தண்கைமாறனிடம் இசை, அன்றுதான், அவனுக்கு குருதி கொடுத்தது ஆரபி என்ற விடயத்தைச் சொல்லியிருந்தாள். அதை மட்டும் சொல்லாமல், இன்னும் சில பல விடயங்களையும் தன் பங்கிற்கு ஊகித்து அவனிடம் அளந்துவிட்டுக்கொண்டிருந்தாள். 

"தணிகை அண்ணா...நீங்கள் கண் முழிக்கேல்ல எண்டு ஆரபி அக்கா, பதறிப்போனா தெரியுமோ, அது மட்டுமே, அடிக்கொருதரம் வந்துவந்து உங்களையே பாத்துக் கொண்டிருந்தவா, அக்கா பேசன்ரா வாற எல்லாரிட்டையும் கனிவாத்தான் நடப்பா எண்டாலும், உங்களிட்ட வேற ஒரு விதமா நடந்துகொண்டா, எங்களுக்கு பாக்க அதிசயமா கிடந்தது"

'இசை.......'

தூரத்தில்கேட்ட ஆரபியின் குரலில் பாய்ந்து ஓடினாள் இசை. மாலையில் அவள் ஒவ்வொருத்தராக பார்த்துக்கொண்டு வந்தபோது, தணிகைமாறனின் பார்வையில் ஒரு வேறுபாட்டைக் கண்டதும்  ஆரபிக்குள் ஒருவித பதற்றம். 

அவனது அந்த குத்தும் பார்வையைத் தாங்கமுடியாது இவள் தலை தாழ்த்திக்கொண்டாள். எந்த வீரப்பெண்ணுக்குள்ளும் இந்த உணர்வுகள் இருக்கத்தானே செய்யும், 

அதன்பின்னர் இரண்டு நாட்களாக அவள் அவனைப் பார்ப்பதற்கு கூட வரவில்லை. வேறு மருத்துவப் போராளிகள்தான் வந்தனர். முதல் முறையாக வெறுமையான மனஉணர்வை அனுபவிப்பதை உணர்ந்து அறிந்தான் தணிகைமாறன். 

இனிமேலும் இப்படியே காலம் கடத்த முடியாது என நினைத்த தணிகைமாறன், மாலையில் பார்க்க வந்த தமக்கையிடம், மெல்ல விடயத்தைப் போட்டுவைத்தான், அதுதான் காணுமே, ஆரபியைத் தேடிக்கொண்டு அவளது இருப்பிடத்திற்கே சென்றுவிட்ட அவனது தமக்கை, " நீங்கள்தானே, ஆரபி?" என்றதும் அவசரமாய் எழுந்துவிட்ட ஆரபி, சட்டென்று தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, 

"ஓம்...சொல்லுங்கோ அக்கா" என்றாள். 

"நான், தணிகையின்ர அக்கா, அவர்.....படையத் தொடக்கப் பயிற்சிக்கல்லூரி பொறுப்பாளரா இருக்கிறார். நிலவன் எண்டு" 

"ஓமக்கா...நிலவன் அண்ணாவே, தெரியும், "

"தம்பிக்கு நீங்கள்தான் ரத்தம் குடுத்தனீங்கள் எண்டு தம்பி சொன்னவர், அதுதான், சும்மா பாத்திட்டு, நன்றி சொல்லிப்போட்டுப் போவம் எண்டு வந்தனான்."

குபீரென்று குருதி முகத்தில் பாய்ந்தது அவளுக்கு, 'தெரிந்துவிட்டதா, எல்லாமே தெரிந்துவிட்டதா அவனுக்கு, அதனால்தான் அந்த குத்தும் பார்வையைப் பார்க்கிறானா,' யோசனையானாள் அவள். 

"என்ன ஆரபி, பேசாமல் நிக்கிறீங்கள்" 

"ஒண்டுமில்லை அக்கா, இருங்கோ" என்றுவிட்டு அருகில் தானும் அமர்ந்துகொண்டாள். 

இசை மெல்ல எட்டிப் பார்த்துவிட்டு, ஓடிச்சென்று தணிகைமாறனிடம் ஒப்புவித்தாள். அவனும் சிறு முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான். 

தொடரும்......


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.