ஆடைத்தொழிற்சாலையில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை!


 புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் இளம் பெண்ணுடன் நிர்வாக உத்தியோகத்தர் முறையற்ற விதமாக நடந்தார் என குறிப்பிட்டு, அமைதியின்மை ஏற்பட்டது.

ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக பெருமளவானவர்கள் குவிந்ததையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.

புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு பணிபுரியும் இளம் குடும்பப் பெண்ணொருவரை, பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தவறாக அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது.

நேற்று மாலை பணி முடிந்த பின்னர், வீடு திரும்பிய இளம்பெண், வீட்டில் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் வரையில் திரண்டு, ஆடைத் தொழிற்சாலை வாயிலை முற்றுகையிட்டனர்.


குற்றம் சுமத்தப்பட்ட நபரை தொழிற்சாலைக்கு வெளியில் வருமாறு கிராம மக்கள் அழைத்தனர்.

ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து, நிலைமையை கட்டுப்படுத்தினர்.

அங்கு குவிந்திருந்த மக்களை அப்புறப்படுத்தினர். குறிப்பிட்ட பெண்ணிடம் ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் அதை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு குறிப்பிட்டனர்.

அத்துடன், குற்றம்சாட்டப்பட்ட நபரையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.