இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை!


 நாட்டுக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்று சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன.

நாட்டு மக்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் அறிக்கை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முழுமையற்ற அறிக்கையினை ஆணைக்குழுவினர் சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பான பொறுப்பினை அரசாங்கத்தால் ஏற்கமுடியாது.

கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த ஜனாதிபதி முனைந்தபோது அதற்கு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டனை இடமளிக்கவில்லை.

ஆணைக்குழுவில் மாற்றம் ஏற்படுத்தாமல் துரித அறிக்கையினை கோரினார்கள். சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை நிறுத்தப்படவில்லை. விசாரணை நடவடிக்கைள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ஆகவே, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.