ஐ.நாவில் சமர்பிக்கப்படவுள்ள “பூச்சிய அறிக்கை”


ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூச்சிய அறிக்கை, அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருப்பதே பாதிப்புக்குக் காரணமாகியுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'முடிவற்ற யுத்தம், ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம், வாழ்க்கை மற்றும் அடையாளம்' என்ற ஒக்லண்ட் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பில், இன்று இடம்பெற்ற இணையவளி கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பில் எத்தகைய தீர்மானம் கொண்டுவருவது என்று உறுப்பு நாடுகள் ஆராய்ந்துவரும் வேளையில் இந்த அறிக்கை வெளிவந்திருப்பது மிகவும் பொருத்தமானது.

தமிழ் மக்கள் தமது பூர்வீக இடங்களில் எந்தளவுக்கு தமது நிலங்கள், பாரம்பரிய வாழ்வுமுறை, அடையாளம் என்பவற்றை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக முழு உலகத்துக்கும் மட்டுமன்றி எமது மக்களுக்கும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நாடுகளின் கண்களை இந்த அறிக்கை திறக்கும் என்று தான் நம்புவதுடன், மக்களின் கண்களையும் இந்த அறிக்கை திறந்திருக்கின்றது.

இந்த அறிக்கையை தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து விநியோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமது நிலங்கள் பறிபோகின்றன, புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன, தமது வாழ்வாதாரம் சுரண்டப்படுகின்றது என்று தமிழ் மக்கள் கடந்த 12 வருடங்களாக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் நடத்தி வந்துள்ளார்கள்.

ஆனால், அவற்றை சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு காத்திரமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கவில்லை.

இதனால் தான் இன்று நிலைமை இந்தளவுக்கு மோசம் அடைந்திருக்கின்றது.

100இற்கும் மேற்பட்ட முகாம்கள் முல்லைத்தீவில் இருப்பதுடன், 67 விகாரைகள் யுத்தம் முடிவடைந்த பின்னர் கட்டப்பட்டிருக்கின்றன.

ஆகவே, சர்வதேச சமூகம், ஸ்ரீலங்கா விடயத்தில் இனிமேலும் அரசியல் ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட்டின் அறிக்கை, அத்தகைய மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை கொண்டிருக்கின்றது.

ஆனால், தற்போது, மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூச்சிய அறிக்கை, அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருப்பதே பாதிப்புக்குக் காரணமாகியுள்ளது.

இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் பெரிதும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

ஆனால் எமக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய பல்வேறு மனித உரிமை மீறல்கள் இங்கே வடக்குக் கிழக்கில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கொள்ள இடமிருக்கின்றது.

அதனால் தான் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

அனுராதா மிட்டால் வெளியிட்டிருக்கும் முடிவற்ற யுத்தம் என்ற இந்த அறிக்கை, அத்தகைய ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இனியாவது சர்வதேச சமூகம், வடக்குக் கிழக்கில், நடக்கும் விடயங்களைத் தமது கண்களைத் திறந்து பார்த்து, அவற்றை அவர்தம் கருத்தில் எடுத்து, உரிய அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.