விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி!

 


அடிப்படைவாதிகளுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க கூடாது என்பதற்காகவே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி தனித்த அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போது பொதுஜன பெரமுனவிலுள்ள சிலர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பில் பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர்,

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினை உடையவர்களை அரசாங்கத்தில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம் என்பது பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கையாக காணப்பட்டது.

அடிப்படைவாதிகளுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க கூடாது என்பதற்காகவே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி தனித்த அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்க முடியாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினையுடையவர்கள் உள்ளார்கள் என கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் தவறாகும். அடிப்படைவாத கொள்கையினை கொண்டவர்களை உள்ளடக்கி ஆட்சியமைக்கவில்லை.

முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்கள் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.

ஆகவே அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

கறுப்பு ஞாயிறுதின போராட்டம் தொடர்பில் தற்போது கருத்துரைக்கும் எதிர்தரப்பினர் கடந்த கால நிகழ்வுகளை மறந்து விட்டார்கள்.

கடந்த அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் முன்னெடுத்திருந்தால் தற்போது கறுப்பு ஞாயிறு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதேவை எற்பட்டிருக்காது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான அறிக்கையில் ஒரு சிலகுறைபாடுகள் காணப்படுகின்றன.

குறைப்பாடுகள் பரிசீலனை செய்யப்படுகின்றன.அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல யோசனைகள். இனிவரும் காலங்களில் முறையாக செயற்படுத்தப்படும் என்றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.