அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச் சேர்ப்போம் !

 அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச் சேர்ப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோவின் இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுக்கையில், “இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பராப்படுத்தும் தீர்மானத்துடன் பிரதான நான்கு கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய அரசிடம் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை  நடாத்திவரும் பிரித்தானிய வாழ் தாயக உறவு அம்பிகை செல்வகுமார் அம்மையாரின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக தாயக, புலம் பெயர் தேசங்களில் வாழும் அனைவரையும் ஓரணியில் குரல் கொடுக்குமாறும் பிரித்தானியா உள்ளிட்ட கோ குறூப் நாடுகளின் கவனத்திற்கும் அவர்களின் ஆதரவையும் ஏற்புதலையும் பெற்று அம்பிகையின் உயிரை பாதுகாக்க ஒன்றிணையுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி கேட்டுக்கொள்கின்றது.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நடைபெறும் 46வது கூட்டத் தொடரில் வெளியான பூச்சிய அறிக்கைக்கு பின்னர் தமிழர்களின் எதிர்பார்ப்பான சர்வதேச நீதிப் பொறிமுறை தீர்மானத்தில் இடம்பெறவில்லை என்றவுடன் ரெலோ தலைமைக்குழு அதன் ஏமாற்றத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை பாரப்படுத்தும் தீர்மானத்தை இறுதி வரையில் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ரெலோவின் பிரித்தானிய கிளை ஊடாக 21/02/2021 பிரித்தானிய வெளிவிவகாரச் செயலகத்திற்கு அனுப்பி உறுதி செய்துள்ளது.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகள் ஊடாகவே நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும்போது அம்பிகையின் அஹிம்சை வழி போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா போன்ற மாவட்டங்களில் நடைபெறும் வலுச் சேர்ப்பு உணவுத் தவிர்ப்பு போராட்டங்களுக்கு ரெலோ இளைஞர் அணி முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

அத்துடன் 12/01/2021 வெளியான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை படித்து மனத் தைரியம் அடைந்த பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கு பூச்சிய அறிக்கையும் இறுதி வரைபும் பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆனால் தொடர்ந்தும் எமக்கான நீதி கிடைக்கும் வரை சர்வதேச நீதிப் பொறிமுறைகளை தீர்மானமாக எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோ குறூப் நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.