இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

 ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி பாவனை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் நாட்டு மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி தடுப்பூசிகளின் பாவனை மாத்திரமே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அந்த தொகுதிக்குள் அடங்குபவை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்து்ளளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் பங்குபற்றலுடன் கொவிட் பரவல் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா தடுப்பூசி வழங்குவதை சில ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தடுப்பூசியின் ஒரு தொகுதி மாத்திரமே இவ்வாறு தற்காலிகமாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த தொகுதிக்குரிய எவ்வித தடுப்பூசியும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை. எனவே நாட்டு மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றோம்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக கொவெக்ஸ் வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்துள்ள தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுகின்றது.

எஞ்சிய தொகுதி தடுப்பூசிகளும் விரைவில் கிடைக்கப் பெறும் என்று நம்புகின்றோம். எனவே எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.