வல்லினம் 18- கோபிகை!!

 


நீண்ட அந்த பாதையில் நடந்துகொண்டிருந்தாள் கொற்றவை. அவள் அங்கு அடைக்கலமாகி வந்து ஆண்டுகள் ஐந்து கடந்து விட்ட தெனினும் அங்குள்ளவர்களின் நிலை அவளை தினமும் வருத்தாமல் விட்டதில்லை. 


போர்க் காலப்பகுதியில் அவளும் யுத்த வடுக்களுக்குள் முகம் கொடுத்தவள் தான், அவளுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தனர், அதில் ஒரு அண்ணன் பல்கலைக்கழக மாணவன், மற்ற அண்ணன் ஆசிரியராகப் பணியாற்றியவர், இரண்டு அண்ணனோடும் பெற்றவர்களோடும் நகர்ந்த அவளது இனிமையான வாழ்க்கைப் பயணத்தில் கடைசி யுத்தம் எனும் அரக்க காலத்தில் அந்த இனிமைகள் பறிக்கப்பட்டது. அண்ணன்கள் இருவரும் அவள் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தனர், அதன் காரணமாகவே அவர்களின் பாதைகளும் மாறிப்போனது. 

மூத்த அண்ணன் ஒரு ஆசிரியராக இருந்தபோதும், இறுதி யுத்த காலத்தில் நாட்டிற்கான பணியின் அவசியத்தினை உணர்ந்து போராட்டத்தில் இணைந்துகொண்டார். அண்ணனின் பிரிவு அவளையும் சின்ன அண்ணனையும் வாட்டியதென்னவோ உண்மைதான், ஆனாலும் அண்ணா, விடுப்பில் வந்தபோது காலத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறியதும் இருவருமே அதனைப் புரிந்துகொண்டனர். 

ஒரு ஆண்டிற்குள் அவர் வித்துடலாக வீட்டிற்கு வந்ததும் அவளது குடும்பமே கதறித் துடித்தது. அண்ணனின் நினைவுகள் கொற்றவையை  சுயநிலை அற்றவளாய் மாற்றியிருந்தது. எப்போதும் அறைக்குள் புகுந்துகொண்டு அழுதபடியே நாட்களை நகர்த்தினாள். யாருடனும் பேசவோ படிப்பில் கவனம் செலுத்தவோ அவளால் முடியவில்லை. 


வாரங்கள் சில ஓடி மறைந்தன. அது ஒரு மெல்லிய மாலைப் பொழுது. அவள் எண்ணங்கள் அவளுக்கே புரியவில்லை, அண்ணனின் பிரிவு, அவளை புத்திபேதலிக்கச் செய்திருந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டு கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். ஒரு கடற்கரையோரமாக நடந்துகொண்டிருந்த அவளை, யாரோ பிடித்து இழுத்து நிறுத்தியது புரிந்ததும், திரும்பிப் பார்த்தாள். 

பூரணமான இராணுவ உடை அணிந்து, சாதரண உயரத்திலும் சற்று அதிக உயரத்துடன் இருந்த அந்த உருவத்தை அவள் இதுவரை எங்கும் பார்த்ததில்லை.  நின்று, பேசாமல் பார்த்துக்கொண்டிருந்த அவளிடம், 

"எங்கே போறீங்கள்?" என்ற கேள்வி வரவும் அப்போதும் மௌனம் காத்தாள். 


ஒருதரம் அவளை உலுக்கி, அவன் திரும்பவும் கேட்டதும், 

"அண்ணா......"

அவளது பதிலில் இருந்து எதை ஊகித்தானோ. அதன் பின்னர் எதுவும் கேட்கவில்லை. 

தூரத்தில் வந்த ஒரு முதியவரிடம், அவளை யாரென்று விசாரித்து, தானே அழைத்துச் சென்று அவளது வீட்டில் சேர்ப்பித்த போது வீடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. 


 அவளைக் கண்டதும், ஓடிவந்து இழுத்துக்கொண்ட தாயார், உள்ளே அழைத்துச் செல்ல, தமையனும் தகப்பனாருமாய் உபசரித்தனர். 

"தம்பி ...இருங்கோ...."

அமர்ந்துகொண்டவன், அவளைப்பற்றிய விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டதுடன், அவசரமாய் அவளுக்கு உளவியல் சிகிச்சை செய்யவேண்டும என்பதையும் கூறி, அதற்காக, மறுநாள், அவளை ஓரிடத்திற்கு அழைத்துவருமாறும் தான் அங்கே நிற்பதாகவும் கூறிவிட்டு எழுந்துகொண்டான். 

அப்போது, 

"உங்கட பேர்.....அங்க வந்து எப்பிடி விசாரிக்கிறது,  மெல்ல கேட்ட, கொற்றவையின் அண்ணனிடம், 

"கானகன்........"  "அங்க வந்து கேட்டா காட்டுவினம்" சொல்லிவிட்டு புன்னகையுடன் நடந்தான். 

மறுநாள், கொற்றவையையும் அழைத்துக்கொண்டு பெற்றோரும் உடன்பிறந்தவனும் சென்றபோது தான், ஒரு உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. 

வைத்தியர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை என்ற வருவேற்பு பலகை அவர்களை வரவேற்றது. உள்ளே சென்று, கானகனின் பெயரைச் சொல்லி கேட்டதும், அவசரமாய் அவர்களை அழைத்துச் சென்றார் ஒரு தாதிப்பெண். 

வைத்தியர் அறையில் இருந்தான் கானகன். கூடவே வேறொரு வயதான வைத்தியரும் இருப்பதைக் கண்டதும், தயங்கி நின்றனர் கொற்றவையின் பெற்றோர். இவர்களைக் கண்டதும் அவசரமாய் எழுந்துவந்து உள்ளே அழைத்துச் சென்றவன், அந்த வைத்தியரிடம் கொற்றவையை அறிமுகம் செய்துவைத்தான். சில நிமிடங்களில் கொற்றவையின் பெற்றோரையும் சகோதரனையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு கொற்றவைக்கான சிகிச்சைகளை ஆரம்பித்தனர். 


ஒரு மணித்தியாலம் கடந்த பின்பு, இவர்களை அழைத்த அந்த வைத்தியர், 

"ஒண்டும் பெரிய பிரச்சினை இல்லை, அண்ணனை இழந்த துயரம், ஒரு சின்ன மனக்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கு, அவ்வளவுதான், மிகவிரைவில அது சரியாகிப்போடும். தொடர்ந்து நாலு வாரம் கூட்டிக்கொண்டு வாங்கோ, அதுக்குப்பிறகு அவ சாதாரணமா பழையபடி வந்திடுவா"

வைத்தியர் பேசிக்கொண்டிருக்கும் போது, உள்ளே, கானகன், வெறித்தபடி இருந்த கொற்றவையையே பார்த்தான், உயர்தர மாணவி, அதுவும் உயிரியல்பீடத்தில் படிப்பவள், பரீட்சைக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருந்தன, படிப்பில் மிக கெட்டிக்காரியான அவள், இப்படியொரு நிலைமையில் இருப்பது அனைவருக்குமே வேதனையான ஒன்றுதானே, 

அண்ணன் மீது எவ்வளவு ஆழமான அன்பு கொண்டிருக்கிறாள், அதனால்தானே இப்படி ஆயிற்று, அவளை விரைவில் குணப்படுத்திவிடவேண்டும் என அவனது உள்மனம் துடித்தது. ஏனோ, அழகான அந்த விழிகளுக்குள், சட்டென்று புகுந்துகொண்ட வெறுமையை அவனால் ஏற்கமுடியவில்லை, பழையபடி அவள் படிக்கவேண்டும், மருத்துவபீட மாணவியாக பல்கலைக்கழகம் சென்று, ஒரு சிறந்த மருத்துவராக  பணிசெய்யவேண்டும் என நினைத்தான். 


தொடரும்.....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.