வல்லினம் 19 - கோபிகை!!

 


நாட்கள் நகர்ந்தன, சொன்னது போலவே தொடர்ச்சியாக வாரம்தோறும் சிகிச்சை பெற்ற கொற்றவை, நன்றாகத் தேறிவிட்டிருந்தாள். அத்தோடு, உயரதரப் பரீட்சையையும் சிறப்பாக  எழுதியிருந்தாள், தன் படிப்பிற்கு உதவி, தன்னை பழைய நிலைக்கு கொண்டுவந்த கானகன் மீது அவளுக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. 

அதன் பின்னர் அவளது வாழ்க்கையில்  நிறையவே நடந்துவிட்டிருந்தது.  அவளது பரீட்சைகள் முடிந்து அவள் வீட்டில் இருந்த ஒரு நாளில்தான், கானகன் அண்ணா வீரச்சாவடைந்த தகவல் அவளுக்குத் தெரிந்தது. அவனது உறவுகள் பற்றி எதுவும் தெரியாததால், அவனுக்காக அழுதுவிட்டு மனதிலே இன்னொரு அண்ணனின் வலியையும் சுமந்தவளாய் நடமாடினாள், 

கானகன் அண்ணாவின் உருவ அமைப்பில் இருப்பதால் அவளுக்கு போர்ப்பிரியனை நிறையவே பிடிக்கும், அவனுக்கு ஒரு கஸ்ரம்  என்றால் அவளால் தாங்கமுடிவதில்லை, அங்குள்ள ஏனையவர்களைவிட போர்ப்பிரியன் மீது அவள் காட்டும் அதீத பாசத்திற்கு இதுதான் காரணம், கானகனின் உருவ அமைப்பில் தான் போர்ப்பிரியனும் இருந்தான், 

இடப்பெயர்வின் போது, கஞ்சி வாங்கச் சென்று வரிசையில் நின்றபோது, உடல் சிதறி இறந்துவிட்ட தாயாரையும், பதுங்கு குழிக்குள் வந்து விழுந்த எறிகணை வீச்சல் பறிகொடுத்துவிட்ட மற்ற அண்ணனையும் அவள் நினைக்காத நாளில்லை. தகப்பனும் அவளுமாக அந்த பராமரிப்பகத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். அவள் ஒரு வைத்தியதுறை மாணவியாக இருக்கிறாள் என்பதைவிட அங்கே, பாதருடன் சேர்ந்து ஒவ்வொருவரையும் அவரவர் வலிகளுக்கேற்ப பராமரித்து வருகிறாள் என்பதே அவளது மனநிம்மதிக்கு காரணமாகும். 


இது அவளுக்கு இறுதி ஆண்டு. இந்த வருடத்துடன் பல்கலைப்படிப்பு முடிந்துவிடும். அதன் பின்னர் முழுமையாகவே இல்லத்தில் தான் தங்கியிருக்கப்போகிறாள், வெளியே வீடு பார்த்து போக ஏனோ அவளுக்கு விருப்பமில்லை, அவளைப் பொறுத்தவரை அந்த இல்லத்தில் இருப்பவர்களைப் பராமரிப்பதிலும் பார்ப்பதிலும் ஒருவித ஆத்ம திருப்தி இருந்தது. 

சேவை ஒன்றே தனது மூச்சென எண்ணி வாழ்பவள் கொற்றவை. அவளைப் பொறுத்தவரை, அண்ணன்களோடும் தாயோடும் அவளது வாழ்க்கை முடிந்துவிட்டது, இனிமேல் மற்றவர்களுக்காக வாழ்வதுதான். அடிமனதில் உதித்த அந்த எண்ணத்தினாலேயே தேவையற்ற சிந்தனைகளுக்கும் உப்புச்சப்பற்ற கற்பனைகளுக்கும்  அவள் இடம்கொடுப்பதில்லை. 

விரைந்து நடந்து போர்ப்பிரியனின் அறைவாசலை அடைந்தாள். கட்டிலில் படுத்தபடி புத்தகம் படித்துக்கொண்டிருந்தவனை அன்போடு பார்த்தவள், "அண்ணா....இப்ப பரவாயில்லையா?"  என்றாள். 

'தங்கச்சிம்மா....வாடா.....பயந்திட்டியா?' இப்ப ஒன்றும் இல்லை' சிரிப்போடு அன்பைக் குழைத்து பதில் சொன்னான் போர்ப்பிரியன். 

'நான் ஒரு டொக்ரர், பயமில்லை, கோபம்....தேவையில்லாம யோசிச்சு மனதைக் குழப்பிக்கொள்றீங்களேன்ற கோபம்....' வார்த்தைகளை நிதானமாய் சொன்னாள். 

'அதுதான்...அதேதான்... என் வைத்தியர் தங்கச்சி இருக்கும்போது நான் ஏன் கவலைப்படப்போறன்.....?' ஆசுவாசமாய் சொன்னவனை ஆழமாய் பார்த்தாள். 

'அண்ணா.....நீங்கள் எதை யோசிக்கிறீங்கள்.....கண்ணதாசனே சொல்லியிருக்கிறார், நமக்கும் மேலே இருப்பவர் கோடின்னு....பிறகென்ன, எனக்கும் உங்களுக்கும் என்ன குறைச்சல், பெற்றவர்கள், உறவுகள் இருந்தும் அநாதையா வாழுறவங்கதான் இப்ப அதிகம் அண்ணா, நாங்கள் யாருமில்லாட்டியும் இங்க எவ்வளவு உறவுகளோட இருக்கிறம், மனம்தானே அண்ணா எல்லாத்தையும் தீர்மானிக்கிது, எத்தினைபேர், கை, கால், கண் இல்லாமல் உறவுகள் துரத்திவிட்டு இப்பிடி இல்லங்களில இருக்கினம் தெரியுமே, அந்த மனவலி அளவில்லாதது இல்லையா அண்ணா,'

ஓம், தங்கச்சி, நான் அப்பிடி கனக்க யோசிக்கேல்ல, ஏதோ ஒரு பதற்றம், அவ்வளவுதான், இப்ப நான் சரி, நீ யோசிக்காமல் போய் மற்றவையளைப் பாரம்மா'

புன்னகையோடு விடைகொடுத்த போர்ப்பிரியனுக்கு, 'அண்ணான்னா அண்ணாதான்....' என்றபடி ஒரு குட்டி ஐசை வைத்துவிட்டு நடந்தாள் கொற்றவை. 


தொடரும்....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.