அகதியின் நாட்குறிப்பு 1 - குடத்தனை உதயன்!!


 “ இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பிப்  பார்க்காதே” என்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கிட்லரின் சுவாசக்காற்றுப் படிந்த தாய் நிலத்திற்கு ஒரு ஐப்பசி மாதம் நடுப்பகுதியில் “ ஆதித்தன் “ என்ற ஆதி வந்து சேர்ந்தான். 

 மெல்லெனத் தூறும் மழைச்சாரல் போன்று குளிர்காலம் ஆரம்பித்திருந்து. இந்த அன்னிய தேசத்தில் சொந்தமென்று சொல்லிக் கொள்ள மாமா இருந்தார். அவர் இன்று வந்து கூட்டிக் கொண்டு போவதாகக் கூறியிருந்தார். அவரின் வருகைக்காக அவன் காத்திருக்கையில்......!

ஆதியின் மனதில் மாமாவின் நினைவுகள் அலை அலையாக  மெல்லக் கிளர்ந்தன . 

மாமாவைப் பார்த்து எத்தினை நாட்கள்....! 

இல்லை , இல்லை , எத்தினை வருடங்கள். 

மாமா தான் எங்கள் குடும்பத்தில் கடைக்குட்டி. அவரைக் குட்டி.. குட்டி... என்று தான் அழைப்பார்கள். நாளடைவில் அவர் ஊருக்கே குட்டியாகி விட்டார். அவரின் உண்மையான பெயர் அனேகப்பேருக்குத் தெரியாது. 

 குட்டி போலவே அவரின் மனது. ஆனால் இந்தக் கால இடைவெளியில் இப்ப எப்படியோ..? என நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

          இந்த முகாமுக்கு வந்து இன்றுடன் மூன்று நாட்களாகின்றது. காலை உணவு ஒன்றுதான் மனம் வைத்துச் சாப்பிடக் கூடிய மாதிரியிருக்கு. ஏதோ பாண் உலக உணவாக இருப்பது எவ்வளவு புண்ணியம். மதியம், இரவுச் சாப்பாட்டை நினைக்கையில்,…. நாக்கு வறண்டு, உமிழ்நீர் வற்றி வயிற்றைக் குமட்டுவது போன்று இருக்கின்றது.

          உறைப்பான மீன்குழம்புக்கும், பசளிக்கீரைக்கும், காரல் மீன் சொதிக்கும், மனது ஏங்கியது. அட...அட... மஞ்சலுடன் சேர்ந்த அதன் வாசனையும், அதன் சுவையும், நினைக்க.. நினைக்க.. நாவில் உமிழ் நீர் சுரந்து, மனதை கிறங்கடித்துக் கொண்டிருந்தன. பழைய நினைவுகள் மனதில் கிளர்ச்சி கொண்டது.

          அம்மா பலவித முகத் தோற்றத்தில் நினைவில் வந்தாள். ஆச்சியும், அம்மம்மாவும், தெய்வமானார்கள். கண்களை இறுகமூடினான். ஆச்சி நெத்தலி மீன் போட்டு தேங்காய்ப் பூவும் தூவி ஒரு ஒடியல்பிட்டு அவிப்பாவே இரண்டும் கலந்த வாசனை அப்ப..... ப்..... பா வாயால் சொல்லி மாளாது. அம்மா என்ன குறைவே..., பனங்கட்டியும் குரக்கன் மாவும் கலந்து பிட்டு அவிப்பாவே என்ன சுவை, இங்க இலையும் குழையும், என்ன கோதாரியில போன சாப்பாடு... எனச் சலித்துக் கொண்டான்.

 அம்மாவின் நினைவுகள் கடல் அலைகள் போன்று அமைதியாக எழுந்து. மெதுவாக வெள்மணலை நுரைகளால்  தழுவி, வருடிச் செல்லுமே, அதே சுகத்துடன் மனதைவருடி மூச்சுக் குழாயடைத்து விழியோரம் நீர் கசிந்து கன்னக்குழிகளைச் சுட்டது.

*****************************************************

          இப்படித்தான் ஒரு கார்த்திகை மாதம். கடும் மாரி என்று சொல்வார்களே...    அந்தச் சொல்லுக்கு என்ன வலிமையுண்டு என்று அவன் உணர்ந்த தருணமது. வானம் கும்மிருட்டாக தோன்றும் தீடீரென மின்னல் வெட்டும், இடி இடிக்கும், சோவென்று மழை அடித்து பிய்த்துக் கொண்டு பெய்யும். பின்பு களைத்துப் போய் ஓய்வெடுக்கும். மீண்டும் தொடரும். அப்படி ஒரு மாரியை அவன் பார்த்ததில்லை.

அப்படியான மாரிப் பொழுதில் கறிவகைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய காலமது. மீன் பிடிக்காலம் படுத்துறங்கிய காலமாக அந்தக் கார்த்திகை மாதம் இருந்தது.

இப்படியான காலங்களில் ஆடு, மாடு , அடிப்பது வழமை. வீட்டை ஐயா மாடு சமைக்க விட மாட்டார், இதனால் அம்மாவுக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டை வரும்.  அன்றும் அப்படித்தான் வெளியில் போட்டு வந்தவன். 

“ அம்மா “ பசிக்குது... 

என்றவாறு.. அடுப்படிக்குள் குந்தினான்.

          குத்தரிசிச் சோற்றில் , பருப்பு முழிபிதுங்கிக் கிடக்கச் சொதிச்  சட்டிக்குள் மிளகாயும், வெங்காயமும் துள்ளிக் குதித்தது போன்று தலைகவிழ்ந்து கிடந்தன. அதைப் பார்த்ததும், அவனது பசி இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்து.  பித்து தலைக்கேறியது. இரண்டு வாய்சாப்பிட்ட பின்பு கோப்பையைச் சுழட்டி எறிந்து விட்டு வெளியில் சென்று விட்டான்.

அவனின் தாய் சன்னதம் கொண்டு கத்தினாள்.   

'இன்று ஆடு அடிச்சவங்கள் வேண்டி இருக்கலாந்தானே. பிள்ளைகளை மட்டும் பெறத்தெரியும் ஒழுங்காச் சாப்பாடு போடத்தெரியா.?'  பசி அன்று அவனைப் பேசவைத்தது. 

     மாலை நகர்ந்து கொண்டிருக்கையில்,  இருள் இன்னும் இறுக்கிக் கொண்டது. மழைக் குளிருக்கு தேனீர் குடிக்க வேண்டும் போல் தவனம் ஏற்பட்டது. எங்கே.. போவது?  என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது. மதியம் இளையம்மா வீட்டை ஆட்டுக் கறியுடன் ஒரு வெட்டு வெட்டி வயித்தை நிரப்பியாச்சு. இரவு அம்மம்மா வீட்டை போவம்..  என நினைத்து நடையைக் கட்டினான்.

     “ அவன் “  வீட்டில் பிசகு என்றால்  தஞ்சம் கோருமிடம் இந்த இரண்டு வீடுகளுந்தான். கேற்றைத் திறந்து உள் நுழைந்தான்.

அம்மாவின் விசும்பல் இப்படி ஒலித்தது......! 

நான் கல்யாணம் கட்டி இத்தினை வருசம்,  ஒரு நாள் பார்த்து அந்த மனிசன் கூட.... 

என மூக்கைச் சிந்தினா..... 

அவன் அங்கு அம்மாவை எதிர்பார்க்கவில்லைத்தான்.

எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுமாப் போல, மாமி வேற,

 அவருக்கு பெரியாள் என்ற நினைப்பு, 

வயதுக்கு மிஞ்சிய கூட்டாளிகள்..  

என அவாவின் வார்த்தைகள் வந்து விழுந்தது. அவாவுக்கு வேறபிரச்சினை. அவா சொல்லும் வேலைகளை அவன் செய்வதில்லையென்ற மனத்தாங்கல்.               

ம்...ம்...ம்... 

என்று மூச்சு வெளித்தள்ள சுவர் ஓரத்தில் நெஞ்சு படபடக்க நின்றவன். 

       மாமியின் கதையைக்கேட்டு. கிழிஞ்சிது கிருஷ்ணகிரி என இருட்டுக்குள் தலையாட்டினான். ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு தினுசில் ஒலித்தது. அம்மம்மாவின் குரலைத்தவிர. 

ஒ..... ஒ......  

எல்லாத் தளபதிமாரும் நிற்கினம் போல என நினைத்து, அவன் வெளியேற நினைக்கையில், அவன் ஆசை ஆசையாக வளர்த்த நாய் வாலை ஆட்டிக்கொண்டு அவனை நோக்கி வந்தது.

'என்ன சனியனுக்கு இது வருகிது' என்று நினைக்கவும்.

  மூத்த மாமாவின் குரல் இப்படி ஒலித்தது. 

“ குட்டி “ ஆரெண்டு பார். 

அந்தக் கணப்பொழுதில்..! அவன் வெளியேற நினைக்கையில்.., அவன் மாமா முன்பு கைதியாக நிறுத்தப்பட்டான்.

அம்மாவின் கண்ணீர் சகோதர பாசத்தை அசைத்துப் பார்த்திருக்க வேண்டும். அவனுக்கு விழுந்த அடியில் அவன் தெளிவாக உணர்ந்து கொண்டான். முதன் முதலாக அன்று அவன் அந்நியத்தை உணர்ந்து கொண்ட தருணம். இவ்வளவு கெடுபிடிகளுக்கிடையில், பாசமாக வளர்த்த நாய் தன்னைக்காட்டி கொடுத்து விட்டதேயென்ற கோபம் வேற. அவ்வளவு அடியின் வேகம், அவனை நாயிலும் கோவம் கொள்ள வைத்தது.

      அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை, உப்பில்லா விட்டால் தெரியும் உப்பின் அருமை என்பது போல, தூரதேசத்திலிருந்து அம்மாவை நினைக்க நாடி நரம்பெல்லாம் சூடேறிக் கண்கள் பனித்தன. அவனுக்கும் அழத் தெரியுமென்று,  அன்று அவன் உணர்ந்த தருணமது.

********************************************************

          நடேசர் அன்று முழுவதும் கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தார். அவருக்கு ஜெர்மனியில் உறவு என்று சொல்லிக் கொள்ள  எவருமில்லை.. பாவம்.! மனிசன் அங்கு நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். 

      இந்தியன் ஆமியின் வருகையும், இயக்க ஆதரவாளர், என்ற கீழ்த்தரமான காட்டிக் கொடுப்பும், மாற்று இயக்கத்தினர் குண்டியில மண்ணைத் தட்டிக்கொண்டு, வீடு தேடி வரவும், உயிர் காக்க வேறு வழியின்றி இங்கு வரவேண்டியதாப் போயிற்று.

“ அண்ண “  என்ன..?  பலமான யோசனை... 

என்றவாறு அருகில் வந்தமர்ந்தான் ஆதீ.

என்னத்தையடா யோசிக்கிறது..?

நீயும் போய்விட்டால்.. , நான் இங்க தனிய என்றவாறு... பெரிய தொரு மூச்சை எறிந்தவாறு இப்படி கூறினார். இங்க மயிருக்க வந்த நேரம் வன்னிக்குப் போயிருக்கலாம். அதைச் சொல்லும் போது அவரின் கண்களில் நீர்கோர்த்தன.

“ தம்பி ஆதி “

என்னை உன்ர அண்ணணா நினைத்து, மாமாவிட்ட சொல்லி என்னையும் கூட்டிக்கொண்டு போடா. 

என உரிமையுடன் கேட்டார். 

இந்த முகாம் இருக்கும் புறச்சூழலைப் பார்க்கையில் வாழ்க்கை மட்டும் நரகம் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது என நிறுத்தினார்.

 அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவரைப் பார்க்கையில் பாவமாக இருந்தது. என்ன சனியன் பிடிச்ச வாழ்கை.. நாடு  நாடா அலைய வேண்டிக் கிடக்கு...

என ஆதி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

      நாசமாப்போவார் சமாதானம் வேண்டித்தருவார்கள்,  எங்கட சனம் இனியாவது நின்மதியா வாழுமென்று இருக்க, வடக்கத்தையான் எல்லாருக்கும் வாயிக்க வைத்துப் போட்டாங்கள். என அவரது ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்தார்.

      அவர் இந்தியாவைத்தான் திட்டுகிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆதிக்கும் அதே அளவு கடுப்பு இருந்து.

ஆதி மௌனமாக யோசித்தான். நடேசரைக் கூட்டிக்கொண்டு போனால் தனக்கும் நல்ல உதவியாக இருக்கும். ஆனால்.... மாமா என்ன சொல்வாரோ. என உள்ளூரப் பயந்தான்.

 “ அண்ண “ ஒன்றும் யோசிக்காதையுங்கோ....

மாமாட்ட கதைத்துப் பார்ப்பம்.

என அவருக்கு தைரியம் கொடுத்தான்.

சரி.. இரடா வாறன் குளிச்சிட்டு... 

என எழுந்து சென்றார்.

           ஆதிக்கு நேரம் ஆக..... ஆக...... அவனது மனத்துடிப்பு  அதிகமாகியது. என்னடா..  இன்னும் மாமாவைக் காணேல , வருகிற வழியில் ஏதாவது ச்சா ... ச்சா... அப்படி இருக்காது என நினைத்தவாறு வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டினான்.

     இப்ப இருக்குமாப் போன்று, அந்த நேரத்தில் சாலை வழிகாட்டி ஒன்றும் அன்று இல்லை. ஓரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலம் போவதற்கு அனுமதி வேண்டும் போன்ற சட்ட சிக்கல் இருப்பதை அவன் பின்பு தான் அறிந்து கொண்டான்.

அவனது மனதைப் பல நினைவுகள் ஊடறுப்பு செய்து கொண்டிருக்கையில்..,  நடேசர் வந்தார்.

வா..  தம்பி போவம்.. என உற்சாகம் தொனிக்க கூறினார். 

சற்று முன் இருந்த கவலை தோய்ந்த குரல் இப்போ அவரிடமில்லை. மனித மனங்களை கவலை, நோயிலிருந்து மாற்றும் சக்தி நீருக்கு உண்டு,  என அவன் பல முறை உணர்ந்து கொண்டான். அதன் மாறுதல் நடேசரிலும் ஒரு உற்சாகம் , மகிழ்ச்சி தெரிந்ததை அவன் உணர்ந்தான்.

                 சாலையில் இறங்கி நடக்க துவங்கினார்கள். சூரியன் வருவதும், போவதுமாக விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது.

ஒரளவு நிறைவான குளிர் காது வழியாக உடலுக்குள் இறங்குவதை உணரக்கூடியதாக இருந்தது. முதல் முத்தம், முதல் குளிர், என உடற் கூறுகள் சிலிர்த்து சிணுங்கியது. 


தொடரும்............


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.