இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று !

 


ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் இன்றைய திங்கட்கிழமை அமர்வு இலங்கைக்கு முக்கியமானதொன்றாகியுள்ளது. 

அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 

பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்து வாக்களிப்பில் கலந்துகொள்ள வாய்ப்புள்ள நிலையில் , 47 உறுப்பு நாடுகளில்  நம்பிக்கைக்குரிய நாடுகள் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எத்தனை நாடுகள் நடுநிலை வகிக்கும் போன்ற பல கேள்விகளுக்கு மத்தியில் ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானத்தின் விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

மறுப்புறம் இலங்கை குறித்த தீர்மானத்தை முன்வைத்துள்ள பிரிட்டன், ஜேர்மனி, மற்றும் கனடா உட்பட 6 நாடுகளுமே தீர்மானத்திற்கு ஆதரவு கோரி கடந்த மூன்று வாரகாலமாக இராஜதந்திர சந்திப்புகளை முன்னெடுத்திருந்ததுடன், அதன் வெளிப்பாடுகளை இலங்கையிலும் காணக்கூடியதாக இருந்ததது. 

எவ்வாறாயினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த இலங்கை , அதனை அடியொட்டிய வகையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை எந்தவகையிலும் இலங்கை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே விவாதத்தின் பின்னர் நிச்சயம் வாக்கெடுப்பு இடம்பெறும். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் சீனாவினதும் இந்தியாவினதும் நிலைப்பாடுகள் முக்கியமானதொன்றாகவே கருதப்படுகின்றது. ஜெனிவாவில் இம்முறை இலங்கை விடயத்தில் சீனாவும் இந்தியாவும் ஒரு கோட்டில் நின்றுவிடுமா என்றதொரு ஐயப்பாடு காணப்படுகின்றது. 

அவ்வாறு ஆதரவுக் கேட்டில் இரு நாடுகளும் நின்று விட்டால் நிச்சயம் அது இலங்கை இராஜதந்திரத்தின் முக்கியதொரு வெற்றியாகவே கருத முடியும். சீனாவின் நிலைப்பாடு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதும் அறிவிக்கப்பட்டதுமாகவே உள்ளது.

அதாவது ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும். இதனடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை வலுவாக சீனா ஆதரிக்கவுள்ளதாக ஜெனிவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் அரசியல் ஸ்தீரத்தன்மை , இன ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவற்றை இலங்கை வலுவாக பேணுவதாகவே நட்பு நாடென்ற வகையில் சீனா நம்புவதாகவும் ,  தேசிய அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கான சாதனைகளுக்கு வாழ்த்துக் கூறுவதாகவும் சீனா தனது ஆதரவு நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி குறிப்பிட்டுள்ளது. 

மனித உரிமைகளை தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் , நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பாதிக்கப்பட்ட குழுக்களின் உரிமைகளை பாதுகாத்தல் , தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற விடயங்களில் இலங்கையின் முயற்சிகளையும் சாதனைகளையும் பாராட்டுவதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மீதான அரசியல் மயமாக்கல் மற்றும் இரட்டை நிலைப்பாடு போன்றவற்றை சீனா எதிர்ப்பதோடு , ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வலியுறுத்துவதோடு இலங்கை குறித்த அமர்வில் சமர்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் தீர்மானங்கள் குறித்து கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள சீனா, இலங்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளது.

ஆனால் இந்தியா அவ்வாறு அறிவிக்கவில்லை. மாறாக இலங்கை தொடர்பான இந்தியாவின்  தொடர்ச்சியான நிலைப்பாட்டை முக்கிய இரு தூண்களாக வகைப்படுத்தி ஜெனிவாவில் விளக்கமளித்துள்ளது.

அதாவது  இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி , கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளதாகவும் இதனை தவிர வேறு தெரிவுகள் இல்லை என்பதையும் உறுதிப்பட குறிப்பிட்டுள்ளது.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக  நம்புவதோடு , தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைப்பதாகவும் ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளது.

இது மாத்திரமல்லாது இலங்கை குறித்த தீர்மானத்தின் திருத்தங்களுக்கும் பங்களிப்பு செய்துள்ளது. இந்த பங்களிப்பின் அடிப்படையில் தீர்மானத்தை இந்தியாவால் எதிர்க்க இயலாது. 

மறுபுறம் ஆதரவளிக்கும் பட்சத்தில் பன்னாட்டு அரசியலில் சீனாவும் - இந்தியாவும் ஒரு புள்ளியில் நிற்பதாகவே அமையும்.

எனவே தான் இன்றைய ஜெனிவா அமர்வு இலங்கையின் கடந்தகால பாரதூரமான மனித உரிமைகளுக்கு பொறுப்புக்கூறலை மையப்படுத்தியதாக அமைந்தாலும் பிராந்திய அரசியல் இராஜதந்திரத்திலும் செல்வாக்கு செலுத்துவதாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.