கிளிநொச்சி கசிப்பு போத்தல்கள் மீட்பு!


 கிளிநொச்சி கண்டாவளை பத்தன் மோட்டை பகுதியில் கிராம அலுவலர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 11 போத்தல்  கசிப்பு மற்றும் கைத்தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை கிராம அலுவலர் பிரிவில் உள்ள பத்தன் மோட்டை கிராமத்தில்  சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி விற்பனை தொடர்ந்து இடம்பெறுவது தொடர்பில் கிராம சேவகருக்கு  கிடைத்த தகவலுக்கமைய இன்று(23-03-2021) சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர்  கசிப்பு வைத்திருந்த ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, தனது உடைமையில் வைத்திருந்த 11 போத்தல்  கசிப்பு, கைத்தொலைபேசி மற்றும் வெற்றுக்கன்கள் என்பவற்றை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மற்றும் மாவட்டத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஆகியோருக்கு தகவல் வழங்கிய போதும் நீண்ட நேரமாக பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தராததால் குறித்த குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு கிராம அலுவலர்களால் சட்டவிரோத மணல் அகழ்வு  மற்றும் கசிப்பு உற்பத்தி களை கட்டுப்படுத்தும் வகையில்  பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கின்ற போதும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கு பொலிசாரை அழைக்கின்ற போது குறித்த இடத்துக்கு பொலிஸார் வருகை தர மறுப்பது அல்லது குறித்த இடங்களுக்கு வருகைதராமை மற்றும் பொலிஸார் அசமந்தப் போக்கை கடைபிடித்தல் என்பவற்றால்  மேலும் இந்த பிரதேசங்களில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.