அன்னை அம்பிகை...!!


உலகெங்கும் தமிழர்தம் போராட்டங்கள் வானாளவப் பெரிதுயர்ந்து நிற்கும் தருணம் இது. பிரித்தானியாவிலிருந்து அன்னை அம்பிகை பசித்திருந்து போராடுகிறார். மக்கள் திரண்டு நின்று அவரது முதன்மையான அறப்போருக்கு  வலுச்சேர்க்கவேண்டிய தருணத்தில், பிரித்தானியா முதல் உலகெங்கும் பரவியிருக்கும் சில அமைப்புகள் கள்ளமௌனத்தில் உறைந்திருக்கின்றன.


தமிழர் வரலாற்றின் ஏகபோக உரிமையை எந்த அமைப்பும்  தமதென்று தனித்துக்கொண்டாடவியலாது. மாவீரரும், அறவழியில் போராடும் மக்களுமே அதன் இயங்குசக்திகளாக என்றென்றும் விளங்குவர். 2009 இல் புலிகள் மௌனித்தபின்னர்,   தன்னிச்சையாக இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயர் கொண்ட  அமைப்புகள், ஈழத்தமிழர் மக்களவைகள், பெண்கள் அமைப்புகள் என எவையும் அம்பிகை அம்மாவின் அறவழிப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க மனமின்றிய அதிகாரப் போதையில் திளைத்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தாளம்போடும் எழுத்தாளர்கள், புத்திசீவிகள், மேடைமுழக்கத் தொழிலாளிகள், Facebook குரல்கொடுப்போர் சங்கம்  என எவரையும் இங்கே காணவில்லை என்பதும் அதிசயமே.


உரிமைக்கான சுதந்திரப்போரும் ,  உயிர்வாழும்  மூச்சுக்காற்றும் அவரவரது அடிப்படை உரிமை.  அன்னை அம்பிகையின் போராட்டம் தனித்துவிடப்பட்டிருப்பதற்கான  "கள்ளமௌனங்களை" உடைத்து மக்கள் அவருக்கு ஆதரவை வழங்கவேண்டும்.


அவர் அறவழியில் போராட நினைத்ததே மதிப்பிற்குரியது. தனது தார்மீகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறார் என்பதே உலகிற்கான மாபெரும் செய்தியாக  அமையும்.


-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.