கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு!


இலங்கையின் கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, திருகோணமலை பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்த 20 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னார் கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்த 20 தமிழக மீனவர்களையும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்கள் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையால் அவர்கள் எதிர்வரும் எட்டாம் திகதி வரை கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களையும் விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை விசேட சுற்றிவளைப்புக்களின் போது, இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதாக 54 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களின் ஐந்து படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பான கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக கரிசனை காட்டப்பட்டதுடன் அவர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது தொடர்பாகவும் உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.