தேச விடுதலைப் போராட்டத்தில் மனோ அக்காவின் பிரிவு!!

 


எல்லோரும் நேசித்த, எல்லோரையும் நேசித்த மனோ அக்கா.

பிரான்சில் தமிழீழ விடுதலையின் பாதையில் நடந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் மனோ அக்கா.
விடுதலைப் போராட்டத்திற்காக உழைக்கும் அத்தனை பேரையும் தன் பிள்ளைகள் போல் பார்க்கும் தாயுள்ளம் படைத்தவர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகச் செயலக முன்னாள் பொறுப்பாளர் வேலும்மயிலும் மனோகரன் அவர்களின் துணைவியார்தான் இந்த மனோ அக்கா.
கணவர்களின் விடுதலைப் போராட்டப் பயணத்தில் பக்கத்துணையாக அவர்களின் மனைவிகள் பயணித்த வரலாறு, எல்லா விடுதலைப் போராட்டங்களைப் போலவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அரிதான ஒன்றுதான். அந்த அரிதான மனைவிகளில் மனோ அக்காவும் ஒருவர்.
புலம்பெயர்ந்த மண்ணில் எத்தனையோ நெருக்கடிகளுக்கும் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் கணவரோடு தன்னையும் இணைத்துக்கொண்டவர். பிரான்சில் தமிழ்ப் பெண்கள் அமைப்பை தூக்கி நிறுத்திய தூண் இவர். பிரான்சில் நடக்கும் எந்தத் தமிழ்த் தேசிய நிகழ்விலும் முன்னின்று விடுதலைக்காக ஓய்வற்று உழைத்த தாய், இன்று ஓய்வெடுத்து உறங்குகிறார்.
பொறுப்புகளும், பதவிகளும் வரும்போது தலைக்கனம் தானாகவே வந்தமர்ந்துவிடும். ஆனால், எத்தனை பொறுப்புக்கள் வந்தபோதும் தலையில் கனம் கொஞ்சம்கூட ஏற்றாதவர். விடுதலைக்காகப் பணியாற்றும் யாரைக் கண்டாலும் கனிவோடு பேசி, நலன் விசாரித்து அவர் சிந்தும் புன்னகையும் நகைச்சுவையும் அவரது அன்பை வெளிக்காட்டப் போதுமானதாக இருக்கும்.
யார் உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்யும் மனம் படைத்தவர். உதவி கேட்காமலே தானாகச் சென்று உதவும் உயர்ந்த குணமும் படைத்தவர். எல்லோரும் நேசித்த, எல்லோரையும் நேசித்த ஓர் அற்புதமான தாய் இத்தனை சடுதியாக எமைவிட்டுப் பிரிந்ததை நெஞ்சமேற்க மறுக்கிறது. ஆனாலும் அவர் கொண்ட விடுதலைப் பணியும், அவர் கண்ட விடுதலைக் கனவும் ஒருநாளும் வீண்போகாது.
தேச விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ கருத்து முரண்பாடுகள் வந்துவந்துபோகும். பிரிவுகளும் துயரங்களும் கடந்துபோகும். ஆனால், எங்கே இருந்தாலும் மனோ அக்காவின் மீதான அன்பும், மரியாதையும், பாசமும் அவர் கூடப் பழகிய யாருக்கும் கொஞ்சமும் குறைந்து போகாது என்பது மட்டும் உறுதி.
- ஈழமுரசு குடும்பத்தினர்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.