ஐ.நா.வுக்கு தவறுகளை சரிசெய்வதற்கு சந்தர்ப்பம்!


கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம் கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஐ.நா. மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்துலகத் தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், காணொளி தொடர்பாடல் ஊடாக முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது உரையில், “கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில் தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டுப் பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது.

உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.

உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தேவை இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும் கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்வதற்கும் முன்னேறுவதற்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.