மியன்மார் போராட்டங்களில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!


மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டங்களில் இன்றும் பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மத்திய சாகிங் பிராந்தியத்தில் உள்ள மோனிவா நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மாண்டலேயில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ள நிலையில், போராட்டத்தை முடக்குவதற்கு பொலிஸார் முன்னர் கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதுடன் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலுத், மத்திய நகரங்களான மோனிவா, மைங்கியன் மற்றும் மேக்வேவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன, அங்கு பாதுகாப்புப் படையினர் வெடிமருந்துகளை வீசியதில் ஐந்து பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக்த தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அந்நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெருமளவான பிரதிநிதிகளை இராணுவம் தடுத்துவைத்துள்ளது.

ஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிய தற்காலிக முயற்சிகள் முறியடிக்கப்பட்ட தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.

இதேவேளை, மியன்மாரில் பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை முடக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு வருவதுடன் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.