பொதுமன்னிப்பு என்பது நமது நாட்டிற்கு புதிதான விடயமல்ல!


 நமது நாட்டிற்கு பொதுமன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல என பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு  இன்று (புதன்கிழமை) அனுப்பி உள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் வீ.ஆனந்தசங்கரி மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நேரத்தில் யுத்த களத்தில், யார்? யார்? எப்படி? நடந்து கொண்டார்கள் என்று சரி, பிழைகளை ஆய்வு செய்வதற்கு அப்பால், யுத்தத்தை மேற்கொண்ட இரண்டு தரப்பினராலும் விரும்பத்தகாத அடிப்படை மனித உரிமை மீறல்கள் அதிகமாகவே நடந்துள்ளன என, நாம் அனைவரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

மேலும் யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தாங்களே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் சுதந்திர தின உரையில் கூறியது போல நடந்து கொள்வீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அந்த கால கட்டத்தில் நான் எதிர்பார்த்தபடி நீங்கள் எதுவும் செய்யவில்லை.

இதேவேளை தற்போதைய ஆட்சியில்  தாங்கள் பிரதம மந்திரியாகவும் தங்கள் சகோதரர் ஜனாதிபதியாகவும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கியவாறு மிகவும் பலம் பொருந்திய ஒரு மனிதராக திகழ்கின்றீர்கள்.

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நினைத்தால் ஒரே நாளில் எமது மக்கள் எதிர்நோக்குகின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வை காணலாம்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளின் ஆணையை ஏற்று செயற்பட்டு, பல்வேறு உயிர்ச் சேதங்கள், பொருட் சேதங்களை ஏற்படுத்திய சிறையிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் மிக நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான  சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் கருணா அம்மான் என்கின்ற வி.முரளிதரன் ஆகியோர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்படுகின்றார்கள். இது போன்றே ஜே.வி.பி. கிளர்ச்சி மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் போன்ற காலகட்டங்களில் பொது மன்னிப்பு பெற்று விடுதலையான மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்ட பலரும், ஜனநாயக அரசியலில் கலந்து நாடு முழுவதும் வலம் வருகின்றார்கள்.

இந்த நிலையில் யாரோ ஒருவரின் கட்டளைக்கமைய செயற்பட்டவர்கள் சிறையில் வாடுவது எந்த வகையிலும் நியாயப்படத்த முடியாத செயலாகும். நமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது புதிதான விடயமுமல்ல என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.

இதேவேளை இன்றைய அரசாவது உண்மையான பௌத்த கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாயின், அதன்படி ஆட்சி நடத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

அனைத்து இன மக்கள் மீதும் அன்புடனும், அமைதியுடனும், கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். உண்மையில் பௌத்த தர்மத்தின் ஆட்சியை நீங்கள் நடாத்த வேண்டுமானால், எல்லாவற்றையும் மறந்து, நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல், நம் நாடும் மக்களும் பெரிது என்று எண்ணி ஆட்சி நடத்தினால் நாம் அனைவரும் சமமாகவும், அன்பாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.

மேலும் நம் நாட்டு மக்களை சந்தோசமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு” என குறித்த கடிதத்தில் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.