இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை!


சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவும் வெற்றியாகும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீர்மானத்தைக் கொண்டுவருவதற்காக பிரசாரம்செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிரான எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.நா. மற்றும் உறுப்பு நாடுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும் என அந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் 46/1 தீர்மானம், இலங்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைக் கண்காணித்து சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் பாதுகாக்கவும் ஒரு புதிய பொறுப்புக்கூறல் செயன்முறையை நிறுவுகிறது. இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது.

இதனையடுத்து, சமீபத்திய மாதங்களில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக ஏராளமான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்தக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும் பொறுப்புள்ளவர்களைக் கணக்கில்கொள்ளவும் பல ஆண்டுகளாகப் போராடி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானமானது, இலங்கையில் நீதி மறுக்கப்பட்டால், இதற்குப் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த ஐ.நா. முன்வரும் என்பதைக் காட்டுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா இயக்குனர் ஜான் ஃபிஷர் கூறியுள்ளார்.

அதேநேரம், இலங்கையைப் போலவே பல அரசாங்கங்களும் தங்கள் சர்வதேச சட்டக் கடமைகளை மதிக்கத் தவறும்போது மனித உரிமைகள் பேரவை இது போன்ற கணிசமான நடவடிக்கைகளை முன்னெடுத்து பதிலளிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.