போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது!


 வாழைச்சேனை பகுதியில் போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி - ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 20 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபருக்கு இந்த போலி நாணயத்தாள்கள் கிடைக்கப் பெற்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதுடன், சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை தற்போது பண்டிகைகால நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதனால் , போலி நாணயங்களை அச்சிட்டு மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் அந்த நாணயாத்தாள்களை மக்கள் மத்தியில் புலக்கத்தில் விடுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் அவர்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.