வல்லினம் 16- கோபிகை!!

 


விரிந்து கிடந்த கூந்தலில் இருந்து நீர்த்துளிகள் தரையை நனைத்தது. தலையைத் துவட்டியபடி யன்னலைத் திறந்தாள் கொற்றவை. மெல்லிய சூரியக் கீற்றுகள் முகத்தில் பட்டு புது உற்சாகத்தைக் கொடுத்தது. யன்னலோரமாய் நின்ற பூமரத்தில் இருந்து வந்த பூக்களின் நறுமணம் நாசியை நிறைத்தது. 

அங்குமிங்குமாய் அசைந்த பூக்கள் தன்னையே அருகில்  அழைப்பதுபோல ஒரு பிரமை அவளுக்குள்...காலையில் அந்தப் பூக்களுடன் கதைத்துவிட்டுத்தான் அவள் தன் வேலைகளை ஆரம்பிப்பது....

'ஏய்..ஒருநாள்ள வாடிப்போயிடுவம் என்று தெரிந்தும் எப்பிடி இப்படி சந்தோசமா இருக்கமுடியுது உங்களால....?மனுசராப்பிறந்த எங்களுக்குத்தான் வாழ்க்கையோட உண்மை புரியவே மாட்டேன்கிறது....ம்ம்.....என்னத்தைச் சொல்ல...'பெருமூச்சோடு பூவைத்தடவிவிட்டு நடந்தவள், அறையை ஒழுங்குபடுத்தினாள். 

தனது மேசையில் இருந்த தங்களின் குடும்ப படத்தை எடுத்து ஒருமுறை உற்றுப்பார்த்துவிட்டு மீண்டும் அதை அங்கேயே வைத்தாள்....

அவள் இழந்துவிட்ட இழப்பென்னபது சாதாரணமானதா??? ஈடு செய்யக்கூடியதா? கண்ணில் குமிழியிட ஆரம்பித்த கண்ணீரை வலுக்கட்டாயமாக அடக்கியவள்,

அன்றைய வேலைகளை குறித்துக்கொண்டு, தனது அறையில் இருந்து வெளியே வந்தாள். அவள் வெளியே வரவும் பாராமரிப்பு ஐயா ஒருவர் அவசரமாய் ஓடிவரவும் சரியாக இருந்தது. 

"என்ன ஐயா....பதற்றமா வாறீங்கள், என்ன பிரச்சினை,?"

"அம்மா .......அந்த பத்தாம் இலக்க அறையில இருக்கிற தம்பி, எழுப்ப எழுப்ப எழும்புதில்லை, பயமாக்கிடக்கு, ஒருக்கா வாறீங்களே,"

"என்னய்யா சொல்லுறீங்கள், ஏன் என்ன நடந்தது?"

"ஒண்டும் இல்லை, நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவம் எண்டு, சமையல் கட்டுக்குப் போட்டு வந்தன், வந்து பாத்தா அவர் இப்பிடி பேச்சு மூச்சில்லாமக் கிடக்கிறார்!"

ஐயா அப்பிடியே போய் பாதறிட்ட ஒருக்கா சொல்லுங்கோ, நான் போய் பாக்கிறன், பதற்றமும் பயமுமாய் விரைந்தாள் கொற்றவை,  

அவள் சென்றபோது, கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த போர்ப்பிரியனைக் கண்டதும் இதயம் ஒருகணம் சில்லிட்டது. 

"அண்ணா.....அண்ணா....." உலுக்கினாள். 

அவனிடமிருந்து பதிலின்றிப்போகவே அவசரமாய் தனது மருத்துவப் பெட்டியைத் திறந்து அவனுக்கான முதலுதவியைச் செய்யத்தொடங்கினாள். 

அதற்குள் அருகில் இருந்த அறைப் பராமரிப்பாளரும் ஏனையவர்களும் கூடிவிட்டனர்,  அவர்கள் எல்லோருமாக போர்ப்பிரியனைத் தூக்கி சாய்ந்தபடி அமரவைக்க, அவனுக்கான முதலுதவியை ஆரம்பித்தாள் கொற்றவை. அதற்குள் பாதரும் வந்துவிட அவசரமாய் சிகிச்சைகள் ஆரம்பமானது. 

இருபது நிமிடங்கள் கடந்த பின்னர், மெல்ல சுயநினைவிற்கு வந்த போர்ப்பிரியன், சுற்றுமுற்றும் பார்த்தபடி எழுந்திருக்க முற்பட அருகில்வந்த பாதர், "என்னாச்சு.....தம்பி" என்றார்.

"பாதர்.....என்ன எண்டே தெரியேல்ல, திடீரெண்டு கண் இருட்டிக்கொண்டு வந்திட்டுது,  முதுகில சுரீல் எண்டு ஒரு வலி, அப்பிடியே விழுந்திட்டன்"

தலையை ஆட்டிய பாதர், சற்றுநேரம் யோசித்தார். 

குழுமி நின்ற மற்றவர்களை வெளியே அனுப்பிய கொற்றவை, பாதரிடம் சொல்லிவிட்டு தானும் வெளியே நடந்தாள். பாதர் ஒரு வைத்தியர், முற்றுமுழுதாக போர்ப்பிரியனை அவர்தான் பார்த்துக்கொள்கிறார், நோய் பற்றி அவர் கதைப்பதற்கு வசதியாக இருக்கட்டும் என்றுதான் கொற்றவையும் வெளியே சென்றது. 

"கவலைப்டாதேங்கோ போர்ப்பிரியன், பயப்பிடத் தேவையில்லை, உங்களுக்கு குணமாகிற அறிகுறிதான் இது, விரைவில நீங்கள் எழும்பி நடக்கப்போறியள், கடவுளின் கிருபை  உங்களுக்கு எப்பவும் உண்டு. உங்களுக்கு உடல் உபாதையைவிட மனஉபாதை அதிகமா இருக்கெண்டுதான் நினைக்கிறன், கடவுள் தான் நேசிப்பவர்கள் மீது எப்பவும் அக்கறையா இருப்பார்....உங்களுக்கும் நிச்சயமா விடிவு கிடைக்கும், அவர் அதிகநாள் உங்களைச் சோதிக்க மாட்டார், உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை, என்றாலும் சொல்லுறன், நீங்கள் நல்லதொரு இடத்தில பெரிய பொறுப்பில இருந்து பணி செய்தனீங்கள், எத்தனையோ பேரை வழிநடத்தியிருக்கிறீங்கள்,  எங்களுக்கு மேல இருக்கிறவையளைப்பற்றி நாங்கள் நினைக்க்கூடாது, எங்களைவிட மோசமான நிலைமையில நிறையப்பேர் இருக்கினம், அதைத்தான் யோசிக்கவேணும்...."

"அப்பிடி ஒண்டும் இல்லை பாதர், இஞ்ச நீங்கள் எல்லாரும் என்னைக் கவனமாத்தானே பாத்துக் கொள்ளுறியள், பிறகு என்ன?"

"ஒருத்தரும் இல்லையே எண்டு நினைக்கிற வலி எவ்வளவு கொடியது எண்டு எனக்கும் தெரியும், ஆனா நடந்ததை நினைச்சு உடையிறதில எந்த பிரயோசனமும்  இல்லை, உங்களை நீங்கள் திடமா வைச்சிருக்கவேணும், கடவுள் உங்களில நிறைய அன்பா இருக்கிறார், அதனால்தான், ஒரு அதிசயமா, அற்புதமா உங்களுக்கு சுகத்தைத் தரப்போறார், அதோட  கூடிய விரைவில நிறைய உறவுகளோட சந்தோசமா இருக்கப்போறியள் பாருங்கோ.....நம்பிக்கை தான் வாழ்க்கை, இனிமேல் நீங்கள் நம்பிக்கையோட இருக்கவேணும்" என்றபடி எழுந்து கொண்டார். 

பெருமூச்சொன்றை வெளிவிட்டான் போர்ப்பிரியன்....உறவுகளா? அது அவனுக்கு கிட்டுமா? எந்தப் பாவத்தின் பலனோ, சிறுவயது முதல் அவன் உறவுகளோடு அதிகம் சேர்ந்திருந்ததில்லை. 

தலையாட்டி பாதருக்கு விடைகொடுத்தவன், அருகிலிருந்த சேகுவேராவின் புத்தகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கினான். Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.