வல்லினம் 17- கோபிகை!!

 


வழமையான உற்சாகத்துடனே பல்கலைக்கழக வளாகத்தினுள் கால் பதித்தாள் கானகி. ஏனோ இப்போதெல்லாம் அவளுக்குள் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. காரணம் கவிதைகள் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியுமா, ஆனால் அதுதான் உண்மை, 

அந்த வித்தகனின் கவிதைகளை வாசிப்பதிலும் அதற்கான காரணத்தை ஆராய்வதிலும் அவளுக்குள் புதுவித தேடல் இருக்கிறதே, வாராவாரம் பத்திரிகையில் வரும் அவனது கவிதைகளில் அவள் ஆழந்து போவதென்னவோ உண்மைதான். 

இப்போதெல்லாம் அவனது கவிதைகளில் கூட சற்று மாற்றம் தெரிகிறது. புரட்சிகர தாகங்களை வலியோடு வடித்தவன், இப்போதெல்லாம், சற்று காதல் கலந்து  வடிக்கிறானே, அவன் தனக்காக அப்படி எழுதுவதாய் அவளுக்குள் ஒரு பிரமை, ஆனாலும் இந்த முகவரிக்கு எனக்கு கடிதம் எழுதலாம் என தோழி குழலினியின் வீட்டு முகவரி கொடுத்து இரண்டு மாதங்களாயிற்று, இதுவரை அவன் கடிதமே போடவில்லை, ஒருவேளை அவள் தன் பெயரைக் குறிப்பிடாததனால்தான்  அவன் போடவில்லையோ, பேசாமல் என்னுடைய பெயரையே போட்டிருக்கலாம் என ஒருகணம் எண்ணியது அவளது மனம். 


சிந்தனைகளோடு நடந்துகொண்டிருந்தவளை, இடைமறித்தது நண்பி குழலினியின் குரல். 

"கானகி.....கானகி......நில்லடி"

நின்று திரும்பியவள், வித்தகன் பற்றிய சிந்தனை கலைந்த கோபத்தில் நண்பியை முறைத்தபடியே,  "ஏய் ...மாடு...எதுக்கடி என்ர பேரை ஏலம் போட்டுக்கொண்டு வாறாய், ஒருதரம் கூப்பிட்டா நிப்பன் தானே"

"நான் கூப்பிட கூப்பிட நீ கேக்காதமாதிரி போனா நான் ஏலம்போடாம வேற என்னதான் செய்யிறது?"

"சொல்லு ...என்னத்துக்கு உவ்வளவு  சத்தமா கத்தினனி?"

"ஓ.....ரொம்பத்தான் உனக்கு, எனக்கென்ன, ஒரு சந்தோசமான விசயம் சொல்லலாம் எண்டு ஓடிவந்தா உன்ர திமிருக்கு, போ நான் சொல்லமாட்டன்"

"அப்பிடி என்ன சந்தோசமான விசயம் சொல்லப்போறாய், எனக்கெண்டா,  என்னை மகிழ்ச்சிப்படுத்துற விசயம் பெரிசா ஒண்டுமே இல்லை"

"வித்தகன்ர விசயமுமோ?"

"வித்தகன்....." ஆச்சரியத்தில் விழி விரித்தவள், 

"ஏய் ....சொல்லடி ...சொல்லடி...."

"போ...நான் பிறகு சொல்லுறன்.."

"என்ர நண்பியெல்லே.....குழல் எண்டா குழல்தான்......என்ன கேட்டாலும் செய்யிறன், இப்ப சொல்லு......"

"என்ன கேட்டாலும் செய்வியோ....?"

"ஐயோ ...செய்யிறன், சொல்லு....."

"அப்பிடியெண்டா, இண்டைக்கு றியோவில ஐஸ்கிறீம் குடிக்கப்போவம்"

"சரி.....என்ன விசயம் சொல்லு?"

 நண்பியைப் பார்க்க பாவமாக இருந்தது குழலினிக்கு, இவள் ஏன்தான் அந்த கவிதைகளின் மீது இப்படி பைத்தியமாக இருக்கிறாளோ என ஆரம்பத்தில் குழலினி ஆச்சரியப்பட்டதுண்டு. இப்போது புரிந்தது. கவிதைகளின் மீது மட்டுமல்ல, கவிதைகளின் சொந்தக்காரனையும் அவளுக்கு நிறைய பிடித்திருக்கிறதென்னபது, ஒருவரைப் பார்க்காமல், அவர் எழுதிய கவிதைகளுக்காக அவரை நேசிப்பதென்பது ஆச்சரியமானதொன்றே, அதுவும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், அதிலும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால், கணினி மேற்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் கானகி, கவிதைகளை இப்படி நேசிப்பதென்பது.......

சிந்தனையில் இலயித்திருந்த தோழியை உலுக்கினாள், கானகி. 

"குழல்.....குழல்....."

"மாடு...மாடு...என்னதுக்கடி இப்பிடி உலுக்கிறாய், என்ர கையே கழண்டு வந்திடும்போல கிடக்கு, சரி...சரி...முறைக்காதை, வித்தகன் எங்கட முகவரிக்கு கடிதம் போட்டிருந்தவர்"

"என்னடி சொல்லுறாய், உண்மையாவா?" 

"ம்....பொறு...பொறு.....என்றபடி தனது புத்தகப் பையில் இருந்து கடிதத்தை வெளியே எடுத்துவிட்டு, தோழியிடம் கொடுக்காமல் மேலும் கீழுமாய் ஆட்டினாள்."

அப்போது பார்த்து அவ்விடம் வந்த, ஆதித்தன்,  குழலினியின் கையில் இருந்த கடித உறையைப் பறித்துவிட தோழிகள் இருவரும் விக்கித்து நின்றனர். 

"ஏய்.....கானகி...என்ன இது, நடு றோட்டில நிண்டுகொண்டு, இதென்ன கடிதம்"

"அண்ணா.....அது..... "இழுத்தபடியே நின்றவள், "அதைத்தாங்கோ அண்ணா" என்றாள்.  

அவளது இருண்டு போன முகமும் ஏக்கம் நிறைந்த, உடைந்துவிடத் தயாரான  விழிகளும் எதையோ சொல்ல, அவசரமாய் கடித உறையை அவளிடம் கொடுத்தான் ஆதித்தன். 

வாங்கிக்கொண்டே, "அண்ணா....நன்றி" என்றாள், சிரிப்பும் அழுகையுமாய் கானகி.  

தலையை ஆட்டியபடியே  யோசனையோடு நடந்தான் ஆதித்தன். 

"சொறிடி......." 

பரவாயில்ல விடு......சொல்லியபடியே, நேரத்தைப் பார்த்தாள் கானகி, 

வகுப்பு ஆரம்பிக்க, இன்னும் நேரம் உள்ளதென்பதை கணக்கிட்டபடி, தோழியையும் கைபற்றி இழுத்துக்கொண்டு அருகில் நின்ற மரத்தடியை நோக்கி நடந்த கானகி, 

மரத்தின் கீழே இருந்த மரக்குற்றியில் அமர்ந்தபடி, கடித உறையைப் பிரித்தாள். 


அன்புடன் என் வாசகருக்கு!

மனம் நிறைந்த வணக்கங்கள். 

இது வரை உங்கள் பாராட்டு கடிதங்கள் 4 எனக்கு கிடைத்தன. உங்கள் பாராட்டிற்கான என் நன்றிகள் வார்த்தைகள் அற்றது. ஒரு கடிதத்திலும் உங்கள் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை. நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக பத்திரிகை அலுவலகத்தில் தெரிவித்திருந்ததாக, அறிந்தேன். மகிழ்வு. 

படியுங்கள், கல்வியே எமது எதிர்காலம், மீண்டும், உங்கள் பாராட்டிற்கு என் நன்றிகள். 

என் குடும்பம் பற்றி கேட்டிருந்தீர்கள், காலம் வரும்போது நான் அவர்களைப் பற்றிச் சொல்கின்றேன், எனக்கு அப்பா அம்மா இருவரும் கிடையாது, சகோதரர்கள் மட்டும்தான்.

மேலதிகமாக என்னைப்பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை, அனைத்தும் என் எழுத்துக்களில் தெரிகின்றது தானே.....

நன்றியுடன்.....

வித்தகன். 

கடிதத்தைப் படித்துமுடித்த கானகிக்குள் ஓராயிரம் மின்மினிகள் சிறகடித்தது. புன்னகையோடு தோழியைப் பார்த்தாள். அவள் பார்த்த  பார்வையின் பொருள் உணர்ந்து கடிதத்தை நீட்டினாள். 

வாங்கிப் படித்த குழலினியின் வதனமும் மெல்ல சுருங்கியது. 

தலைகவிழ்ந்துகொண்டிருந்த கானகியின் முகம் நிமிர்த்தினாள், அவள் விழிகளுக்குள் சின்னதாய் ஒரு அருவி.

"என்னடி?" 

"ஒண்டுமில்லை"

"அழுகிறியா, ஏனடி?"

"தெரியேல்ல குழல், இந்த கடிதத்தை வாசிச்சதும் அழுகை வருது, அவருக்கு அம்மா அப்பா இல்லை எண்ட வேதனையா, இல்லை அவரின் முதல் கடிதம் என்ற பரவசமா எண்டு எனக்குத் தெரியேல்ல, ஆனா, அழவேணும் போல இருக்கு"

சரி விடு, வித்தகனை மனதில் ஏதேதோ யோசிச்சு வைச்சிருக்கிறாய், இவ்வளவு நாளா அவர் ஒரு கடிதம் கூட எழுதேல்லயே எண்டு ஒரு ஆதங்கம் உனக்குள்ள இருந்திருக்கும்.  இப்ப அவரின்ர கடிதத்தைக் கண்டதும் அது கண்ணீரா வெளிப்பட்டிருக்கு. அதோட இன்னொருத்தருக்கு சின்ன வலியெண்டாலும் நீ தாங்கமாட்டாய், இப்ப வித்தகனுக்கு, அதுவும் நீ அளவுக்கதிகமா நேசிக்கிற வித்தகனுக்கு அப்பா அம்மா அம்மா இல்லை எண்டதும் தாங்கமுடியாமல் இருக்கிறது ஆச்சரியமில்லை, சரி வாபோவம்...."

கண்ணைத் துடைத்தபடி எழுந்து தோழியுடன் நடந்தாள் கானகி. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.