வல்லினம் 21 - கோபிகை!!

 


மாலைக்காற்று கூதலோடு வீசியது.....வானக்கம்பளத்தில் நட்சத்திரப்பூக்களின் தூவல் ஆழகாய் சிதறியிருந்தது. மின்மின் ஒன்றின் ஒளி அங்கும் இங்குமாய் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் கேட்ட இரைச்சல்  சில் வண்டின் ராகமாய் இசைத்தது.  சாப்பிட்டுவிட்டு ஆறுதலாக வெளியில் இருந்த பலாமரத்திடியில் அமர்ந்திருந்தாள் ஆரபி. 


வீட்டுக்குள் ஒரே கலகலவென்ற சத்தம். பத்து நாட்களுக்கு மேலாயிற்று. சின்ன அண்ணன் குடும்பத்தினருடன் இங்கு வந்து தங்கி. பருத்தித்துறையில் இருந்த வீட்டை அண்ணியின் உறவினர் ஒருவரிடம் பொறுப்புக் கொடுத்துவிட்டு, வேலையையும் மாற்றல் வாங்கி வந்து சேர்ந்துவிட்டனர். 


அண்ணியிடம் இப்போது ஏக மாற்றங்கள். ஒரே மகன் ஜெயிலுக்கு போய் வந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அகிலினியின் குழப்படிகளும் மனதை தாக்க, அண்ணனும் போதாக்குறைக்கு 'உன்னால்தான் பிள்ளைகள் இப்படியாகிவிட்டனர்' என்றதும் அடங்கி ஒடுங்கிப்போய்விட்டார். 

அங்கேயே இருப்பது சங்கடம் எனத்தோன்ற பகலவன் வெளியே வந்த கையோடு இங்கே ஒதியமலைக்கு வந்துவிட்டிருந்தனர். சீராளன்தான் காணி பார்த்து கூடவே நின்று வாங்கிக்கொடுத்த்தோடு வீடு போடும் அலுவலையும் பார்த்துக்கொண்டிருந்தான். வீடு சரியாகும் வரை, அண்ணன், வாடகைக்கு வீடு பார்க்க, சிவகாமிஅம்மா சம்மதிக்கவில்லை. 

'என் மூத்த பிள்ளையின் உறவினராக இருக்கும் நீங்கள், இந்த ஊருக்கு வந்து வேறு வீட்டுக்கு போவது சரியில்லை, அவனுக்கு கோபம் வரும், இங்கே இருந்துகொண்டே வீட்டுவேலையைப் பாருங்கள்' என்றுவிட்டார்.  அந்த அன்பில் கரைந்துபோன அண்ணனும் அண்ணியும் கூட மறுக்கமுடியாமல் சம்மதித்துவிட்டிருந்தனர். தாயன்பை இழந்துவிட்ட அண்ணாவிற்கும் கூட அந்த தாய்ப்பாசம் தேவைப்பட்டது போல.....

அதே காணியில் இசையரசி அக்காவிற்கு வீட்டுத்திட்டத்திற்கு கட்டிய வீடு ஓரளவு வேலைகள் முடிந்து அப்படியே இருந்தது, அவசரமாய் அதற்கான வேலைகளை முடித்து, ஒரு ஜெபக்கூட்டத்தை வைத்துவிட்டு அந்த வீட்டை அண்ணன் குடும்பத்திற்காக சீராளன் துப்பரவு செய்து கொடுத்தபோது நன்றியுடன் பார்த்தாள் ஆரபி. அவன், அதுவும் தன் கடமை என்பதுபோல சிரித்துக் கடந்துவிட்டான். அன்றாடச் சமையல் அங்கும் இங்குமாக மாறிமாறி நடந்தது. 

பகலவனும் அகிலினியும் கூட 'அத்தை..அத்தை' என அவளையே சுற்றிக்கொண்டிருந்தனர். தவிர அந்த வீட்டு குழந்தைகளும் 'அண்ணா...அக்கா...' என அவர்களிடம் ஒட்டிக்கொள்ள, கானகியும் கூட பகலவனிடமும் அகிலினியிடமும்   'பகல்...அகில்...' என அன்பாக பழகத்தொடங்கியிருந்தாள்.

ஆரம்பத்தில் அந்த சூழலுடனும், அங்கிருந்த மனிதர்களுடனும் ஒட்டமுடியாமல் தனித்து தனித்து இருந்த பகலவன், அகிலினி இருவரும் அத்தையின் வேண்டுகோளிலும்  சீராளனின் அன்பிலும் சற்றே மாறிவிட கானகியின், நேசம் இன்னும் மாற்றியிருந்தது. அனைவரும் கூடிவிட்டால் நேரம் இறக்கை கட்டிப் பறந்துவிடும். 

எண்ண ஓட்டங்களுடன் அமர்ந்திருந்த ஆரபியை, "அத்தை....இந்தாங்கோ" என்ற அகிலினியின் குரல் நடப்பிற்கு இழுத்தது. 

"என்னடா...? " 

கனிவோடு கேட்டவளிடம் கடிதம் ஒன்றை நீட்டினாள். 

"அத்தை கவர் கிழிஞ்சு போச்சு.." மெல்ல இழுத்தாள். 

"அதுக்கென்ன விடு, என்ன கடிதம்?"  கேட்டபடி, பிரிக்க, அகிலினி கையிலிருந்த போனின் லைற்றை அழுத்தினாள். 

கடிதம் போர்ப்பிரியன் அண்ணாவிடம் இருந்து பல மாதங்களுக்கு முன் வந்திருந்தது. அவர் தங்கியிருக்குமிடமும் தன்னுடைய உடல்நிலையையும் குறிப்பிட்டு, ஒரு அலைபேசி இலக்கத்தையும் எழுதியிருந்தார். 

ஆரபிக்கு உடலெங்கும் மின்சாரம் ஓடியது போல ஒருவித பரபரப்பு.... போர்ப்பிரியன் அண்ணா. பெரிய அண்ணாவின் நண்பன், அவரைப்பார்த்தால் அண்ணனையே பார்ப்பது போல ஒரு சந்தோசம் ஏற்படும். 

அவசரமாய் தன்னுடைய போனில் இலக்கங்களை அழுத்தியவள், அதில் காசில்லை என்றதும்  அவ்விடம் வந்த சீராளனிடம் இலக்கத்தைச் சொல்ல. சீராளனும் அழைப்பை எடுக்க, மறுமுனையில் றிங்...போய்க்கொண்டே இருந்தது. 

அந்த அழைப்பு தான் தங்களின் வாழ்க்கையையே மாற்றப்போகிறது என்பது தெரியாமல் மீண்டும் மீண்டும் அழைப்பை எடுத்துக்கொண்டிருந்தான்  சீராளன். ....


தொடரும்....


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.