வல்லினம் 23 - கோபிகை!!

 


'அவள் என்ன நினைத்தால் என்ன' என அவனால் சாதாரணமாக விட்டுவிட முடியவில்லை. சிந்தனைகளை நிறுத்தாது அவசரமாய் வீட்டுக்குள் வந்தவன், மீண்டும் அழைப்பை எடுத்தபடி ஆரபியிடம் வந்தான். 

'என்ன தம்பி, இணைப்பு கிடைச்சதே....' கேட்டுக்கொண்டிருக்க, அழைப்பு இணைக்கப்பட்டது. அவள் பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே, 'டேய்.....' கோபமாய் கேட்ட குரலில் அவசரமாய் போனை எடுத்துப்பார்த்த ஆரபி, சீராளனைப் பார்க்க, 

பேசுமாறு அவன் சைகை செய்தான். 

'தங்கச்சி....' ஆழமான குரலில் ஆரபி அழைக்க, சட்டென்று எதிர்முனையில் மௌனம். 

இவள் தொடர்ந்தாள்.

"போர்ப்பிரியன் அண்ணா, பல மாதங்களுக்கு முன்னம் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார், அதில இந்த இலக்கம் இருந்தது, அண்ணாவைப் பற்றி அறியவேணும் எண்ட ஆவலில நேரத்தைப் பற்றி யோசிக்காம அழைப்பு எடுத்திட்டம். மன்னிச்சுக்கொள்ளுங்கள் தங்கை" 

"அண்ணா அங்க இருக்கிறாரோ,  எப்பிடி இருக்கிறார்,"  ஆரபியின் குரலில் இருந்த பணிவும் பரிவும் பாசமும்  கொற்றவையில் மன நரம்புகளில் ஓடித்தாவியது. 

கடவுளே, அண்ணாவின்ர சொந்தக்காரர் போல, நினைத்தபடியே, 

"வணக்கம் அக்கா, மன்னிச்சுக்கொள்ளுங்கள், அண்ணா இங்கதான் இருக்கிறார், நான் அவரின்ர இலக்கம் தாறன், எடுங்கோ" என்றபடி போர்ப்பிரியனின் இலக்கத்தை அனுப்பிவைத்தாள். 

மனமுட்கள் குத்ததொடங்கியது கொற்றவைக்கு. கடவுளே, ஒரு அவசரத்திற்கு அழைப்பு எடுக்க நான் எப்படியெல்லாம் பேசிவிட்டேன்....பாவம் அந்த பெடியன், சமையல் அம்மாவின் மகன்மாரில இருந்த கோபத்தில இந்த ஆளைப்பேசிப்போட்டனே, அவள் மனம் நொந்துகொண்டிருக்க, 

ஆரபியின் வீட்டினர் போர்ப்பிரியனுக்கு அழைப்பு எடுத்தனர். 

றிங் போய் அழைப்பு இணைக்கப்பட, 

"அண்ணா...." எடுத்ததும் ஆரபியின் குரல் தழுதழுப்போடு கேட்க,

தன் போனை நம்பமுடியாது, விசித்திரமாய் பார்த்த போர்ப்பிரியன், 

"யா....ர் .." என்றதும் 

"அண்ணா....நான் ஆரபி"  என்றதும்...

மனக்கனதிகள் கவிழ்ந்துகொட்டியது போர்ப்பிரியனுக்கு. 

"தங்கச்சி....." அவன் உச்சரித்த விதம் ஆரபிக்கும் அழுகையை உண்டாக்கியது. 

ஒரு மணிநேரம் மாறிமாறி ஒவ்வொருவராய் கதைத்தனர், மனம் திறந்து, மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள் கொட்டியது. வலிகள் சற்றே கடந்துவிட, மனம் அமைதிகொண்டது போர்ப்பிரியனுக்கு. 

ஆரபிக்கும் அண்ணனுக்கும் கூட பெரிய அண்ணனோடு கதைத்ததுபோல ஒரு பேரானந்தம். சிவகாமி அம்மாவும் கூட 'அம்மா..அம்மா' என அவன் கதைத்ததில் மனதில் சற்றே ஆனந்தம் பெற்றார். 

திடீரென ஏற்பட்ட போர்ப்பிரியனின் தொடர்பு, அவர்களுக்குள் ஒரு இனிய அமைதியைப் பிரசவித்திருந்தது. 

மறுநாளே வவுனியாவிற்கு பார்க்க வருவதாக ஆரபி சொல்ல, ஆனந்த எல்லையில் இருந்த போர்ப்பிரியன், "உனக்கு ஏன்டாம்மா என்னால கஷ்ரம்?" என்றான் சற்றே யோசனையுடன். 

"அதுக்கென்ன  அண்ணா, எத்தினை வருசம் உங்களைப் பாத்து, உங்களைப் பாத்தா எனக்கு அண்ணாவைப் பாத்த மாதிரி இருக்கும். நான் வாறன் அண்ணா," ஆரபி சொல்ல அவனும் தலையை ஆட்டினான் மகிழ்ச்சியுடன். 

சின்ன அண்ணனும் அவளும் போவம் எனக்கதைக்க, சீராளன் இடையே புகுந்து 

"நானும் உங்களோட வாறன்...." என்றான்.

"நானும் வரட்டே....." திடீரென கேட்ட அண்ணியின் குரலில் ஆரபிக்கும் அண்ணனுக்கும் இனிய அதிர்ச்சி. 

 "நீ வாறியா?"  சின்ன அண்ணா கேட்க, "ஏன் இவ்வளவு அதிர்ச்சியா கேக்கிறியள், இப்பிடியான இடங்களுக்கு நான் போறேல்ல தான், ஆனா இப்ப மனம் பழையமாதிரி இல்லை,  இப்பிடியான உறவுகளைப்பாத்து, அன்பு காட்டி, ஆறுதல் சொல்லவேணும் மாதிரி கிடக்கு, அதுதான்"

"விடண்ணா, அண்ணி வாறனெண்டுறா, நீ ஏன் இப்பிடி குறுக்கு கேள்வி கேக்கிறாய்?" ஆரபி சொல்ல அண்ணனும் அமைதியாகிவிட்டார். 

சாப்பாடு கொண்டுதானே போகவேணும், அண்ணி சொல்ல, தலையை ஆட்டினாள் ஆரபி. 

அப்போது அங்கே வந்த இசையரசி அக்கா, "அதுக்கென்ன, கோழியை விடிய வெள்ளணவே பிடிச்சா சமைச்சுப்போடலாம், என்ன தம்பி"  என்றார் சீராளனிடம். 

அவனும் அக்காவிற்கேற்ற தம்பியாய், "ஓமக்கா, ரெண்டு கோழியைப்பிடிச்சு அடிப்பம், எல்லாரும் சாப்பிடவேணும்"  என்றான். 

"முறுக்கு, சீடை இதெல்லாம் போற வழியில, கற்பகம் கடையில வாங்கிக்கொண்டுபோவம்" அண்ணி சொல்ல, சின்ன அண்ணா தலையை ஆட்டினார். 


 தொடரும்...


கோபிகை

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.